இலங்கையில் நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அளவுக்குப் பாதுகாப்பில் என்ன பிரச்சினை?


இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் குரல்களை நசுக்கும் வகையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருப்பதுடன், சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, மக்கள் போராட்டங்களை ஒடுக்க கோத்தபய ராஜபக்ச எடுக்கும் கடும் நடவடிக்கைகள் போன்றவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (எச்ஆர்சிஎஸ்எல்) கேள்வி எழுப்பியிருக்கிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 20-வது சட்டத்திருத்தத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் இலங்கை மனித உரிமை ஆணையத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ச உருவாக்கினார். இந்த அமைப்பில், இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிணி மரசிங்கே, டாக்டர் நிமல் கருணாசிறி, கலுபஹானா பியரந்தா தேரா, டாக்டர் விஜிதா நானாயக்கரா, அனுசுயா சண்முகநாதன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கையிலிருந்து வெளிவரும், ‘தி ஐலேண்ட்’ ஆங்கில நாளிதழிடம் பேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்காலிக இயக்குநர் நிஹால் சந்திராசிறி, நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அளவுக்கு இலங்கைக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அரசு விளக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதைவிடவும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைத் தீர்ப்பதற்கே அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2) முதல் திங்கள் கிழமை (ஏப். 4) வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதையும், குறிப்பிட்ட சில பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் அசாதாரண கெஸட் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்த நிஹால் சந்திராசிறி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடன் இதுகுறித்து நாளை (ஏப்.5) பேசவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இல்லத்துக்கு அருகே போராட்டம் நடத்தியவர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதையும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கண்டித்திருக்கிறது. இதற்கிடையே, கைதுசெய்யப்பட்டவர்கள் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட 47 பேரில், 32 பேர் திங்கள்கிழமை (இன்று) வரை ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். பிறர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் காவல் துறையினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

x