செர்னோபில் அணு உலையைவிட்டு வெளியேறிய ரஷ்யர்கள்: என்ன காரணம்?


செர்னோபில் அணு உலையைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருந்த ரஷ்ய ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான எனர்கோடோம் தெரிவித்திருக்கிறது. அணு உலையைவிட்டு வெளியேறுவது தொடர்பான ஒப்பந்தத்தில், உலையின் மூத்த அதிகாரிகளுடன் ரஷ்ய ராணுவத்தினர் கையெழுத்திட்டிருப்பதாகவும் எனர்கோடோம் நிறுவனத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

என்ன காரணம்?

கடுமையான கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்பட்டதால், அச்சத்தில் ரஷ்ய ராணுவத்தினர் வெளியேறிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தகவலை உக்ரைன் துணைப் பிரதமர் இரைனா வெரெஸ்சுக்கும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து சர்வதேச அணுசக்திக் கழகம் விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஐநாவின் தலைமையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, இன்னும் சில நாட்களில் உதவி மற்றும் ஆதரவுப் பணிகளுக்காக நிபுணர்களையும் செர்னோபிலுக்கு அனுப்பவிருக்கிறது.

உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து வடக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை உள்ளது. பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், உடனடியாக செர்னோபில் அணு உலையைக் கைப்பற்றியது. அதன் ஊழியர்களைப் பிணைக் கைதிகளாக ரஷ்யப் படைகள் பிடித்துவைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும், அணு உலையின் பராமரிப்புப் பணிகளை உக்ரைன் ஊழியர்கள்தான் மேற்கொண்டுவந்தனர்.

முன்னதாக செர்னோபில் அணு உலையில் ‘மரணப் பகுதி’ என அழைக்கப்படும் பகுதியில் ராணுவ டாங்குகளை ஓட்டிச்சென்ற ரஷ்ய வீரர்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அண்டை நாடான பெலாரஸில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செர்னோபில் அணு உலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த ஸ்லேவுட்டிச் நகரையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருந்தன. தற்போது அங்கிருந்தும் அவர்கள் வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கிறது எனர்கோடோம்.

அணு உலை விபத்து

1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஒரு மின் பொறியியல் சோதனையை நடத்த சில பொறியாளர்கள் திட்டமிட்டனர். அதிக அனுபவம் இல்லாத அந்தப் பொறியாளர்கள் மேற்கொண்ட அந்தச் சோதனையின்போது, எதிர்பாராதவிதமாக அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவத் தொடங்கின. இந்த விபத்தின் காரணமாக ஓரிரு நாட்களில் 32 பேர் உயிரிழந்தனர். கதிரியக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இதுவரை 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் அது. 2000-ல் அந்த அணு உலை மூடப்பட்டது.

தற்சமயம் அங்கிருப்பதில் பெரும்பான்மையானவை அணுக் கழிவுகள்தான். அதிகமான கதிரியக்கம் கொண்ட 20,000 எரிபொருள் கட்டமைப்புகள் தற்போது அங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன.

x