‘இது தீவிரவாதச் செயல்’ - இலங்கை அதிபர் சீற்றம்!


கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலைக்குச் சென்றிருக்கும் பொதுமக்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்குச் சென்றிருக்கின்றனர். தினமும் 10 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என ஏராளமான பிரச்சினைகள் அவர்களை விரக்தியில் தள்ளியிருக்கின்றன.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் நேற்று (மார்ச் 31) மாலை, அதிபர் கோத்தபய ராஜபக்ச இல்லத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நள்ளிரவு வரை நடந்த இந்தப் போராட்டத்தில் இளைஞர்களுடன் பெண்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மின்சாரத்தை மிச்சப்படுத்த தெருவிளக்குகளை அணைத்துவைக்கும் நிலையில் இருக்கிறது இலங்கை. நேற்று மட்டும், 13 மணி நேரம் தொடர்ந்த மின்வெட்டால் மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். அதிபர், பிரதமர் பதவிகளில் மட்டுமல்லாமல் நிதித் துறை, வேளாண் துறை, விளையாட்டுத் துறை என இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான முழக்கங்கள் இந்தப் போராட்டங்களில் வெளிப்படுகின்றன. நேற்று நடந்த போராட்டத்திலும் ராஜபக்ச குடும்பம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

தலைநகர் கொழும்புவில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நடத்திய இந்தப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டு போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு முயன்றது.

அதிபர் இல்லத்தின் மீது கற்களும் வீசப்பட்டன. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. போராட்டக்காரர்கள் போலீஸ் பேருந்து, ஜீப், தீவைத்தனர். சம்பவம் நடந்தபோது அதிபர் மாளிகையில், கோத்தபய ராஜபக்ச இல்லை எனக் கூறப்படுகிறது.

போராட்டங்களில் ஒரு பெண் உட்பட 45 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். உதவி கண்காணிப்பாளர் உட்பட 5 போலீஸார் காயமடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது ஒரு தீவிரவாதக் குழுதான் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல நாட்களாகப் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடப்பது இலங்கை ஊடகங்கள் மூலம் தினமும் வெளியாகிவருகிறது. சமூக ஊடகங்களில் தனிநபர்கள் பகிர்ந்துகொள்ளும் காணொலிகள் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்திருப்பதைக் காட்டுகின்றன.

x