ஆழ்ந்த ஏமாற்றத்தில் அமெரிக்கா: இந்தியா மீதான அதிருப்திக்கு என்ன காரணம்?


அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துவருகின்றன. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, ரஷ்ய வெளியுறவுத் துறை லாவ்ரோவ் ஆகியோரின் இந்திய வருகை மேற்கத்திய நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் முடிவு ஆழ்ந்த ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. இந்தச் சூழலில், எண்ணெய் இறக்குமதி குறித்த ரஷ்யாவின் யோசனையை இந்தியா பரிசீலித்துவருவதை அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ரசிக்கவில்லை.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் நாடுகள் தொடர்ந்து இந்தியாவிடம் உக்ரைன் நிலவரம் குறித்துப் பேசிவருகின்றன. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் காணொலிச் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பேசியிருந்தார். நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசினார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியின் வருகைக்குப் பின்னர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். மறுபுறம், சர்வதேசப் பொருளாதாரத்துக்கான அமெரிக்க தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் நேற்று இந்தியா வந்திருந்தார். பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இன்று இந்தியா வருகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, போர் நிறுத்தத்தை விரும்பினாலும் ரஷ்யா விஷயத்தில் நேரடியான எதிர்ப்பை இதுவரை காட்டவில்லை. எனினும், ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்காமல் விலகி நின்றது.

மேலும், ரஷ்ய வங்கிகள் ஸ்விஃப்ட் வங்கி தகவல் பரிவர்த்தனை முறை மூலம் வர்த்தகம் செய்வதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடுத்து நிறுத்திவிட்ட நிலையில், ரூபிள் - ரூபாய் பரிவர்த்தனையின் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்த பரிசீலனையில் இந்தியா இருக்கிறது.

இந்தச் சூழலில், நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ, “இது வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய தருணம். உக்ரைனின் சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மையைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் பக்கம் நிற்க வேண்டிய தருணம். ரஷ்ய அதிபர் புதினின் போருக்கு நிதியளிப்பதற்கும், உதவுவதற்குமான தருணம் அல்ல” என்றார். மேலும், எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ஏற்பாடு ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது என்றும் அவர் கூறினார். அதுகுறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.

எனினும், இந்தியாவின் இந்த நிலைப்பாடு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை வலுவிழக்கச் செய்யும் என அமெரிக்கா கருதுவது குறிப்பிடத்தக்கது.

x