உக்ரைன் போருக்கு நடுவே புதினிடம் ‘உதவி’ கேட்கும் ட்ரம்ப்!


உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள், நேட்டோ நாடுகளை ஒருங்கிணைத்து உக்ரைனுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது. புதின் ஒரு போர்க்குற்றவாளி என்றும், கசாப்புக் கடைக்காரர் என்றும் பைடன் விமர்சித்திருந்தார். ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது பழைய சகா புதின் குறித்த விமர்சனங்களைத் தவிர்த்துவருகிறார்.

இந்தச் சூழலில், புதினிடம் ஒரு முக்கியத் தகவல் குறித்து உதவியும் கோரியிருக்கிறார் ட்ரம்ப்.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மகனான ஹன்டர் மீது ட்ரம்ப் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்திவருகிறார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஹன்டருக்கு வணிகத் தொடர்புகள் இருப்பதாக ட்ரம்ப் கூறிவருகிறார். 2020-ல் நடந்த அதிபர் தேர்தலின்போதே இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். குறிப்பாக, 10 வருடங்களுக்கு முன்னர் மாஸ்கோ நகர மேயராக இருந்தவரின் மனைவி, ஜோ பைடன் மற்றும் ஹன்டருக்குப் பெரும் தொகை அளித்ததாகவும், அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறிவருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப், “இன்றைக்கு நம் நாட்டை ரசிக்கும் மனிதராக புதின் இல்லை; இந்தச் சூழலில், மாஸ்கோ நகர மேயரின் மனைவி இரு பைடன்களுக்கு (ஜோ பைடன் மற்றும் ஹன்டர் பைடன்) 3.5 மில்லியன் டாலரைக் கொடுத்தது ஏன் என புதின் விளக்கமளிக்க வேண்டும். புதினுக்கு இதற்கான விடை தெரியும் என்று நான் நினைக்கிறேன். நாமும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

x