நிறுத்திவைக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள்: இலங்கை மருத்துவமனைக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா!


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், காகித உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது முதல் சில நாளிதழ்கள் நிறுத்தப்பட்டது வரை ஏராளமான துயரங்கள் நிகழ்ந்துள்ளன. எரிபொருள் முதல் உணவுப் பொருட்கள் வரை எல்லாமே கடும் விலை உயர்வையும் தட்டுப்பாட்டையும் சந்தித்திருக்கின்றன. இதன் உச்சமாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதால், அறுவை சிகிச்சைகள்கூட நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக இலங்கை ஊடகர் அயுபோவன் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். “பெரதேனியா மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாட்டால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அவசரகால அறுவை சிகிச்சைகள் மட்டும்தான் நடத்தப்படுகின்றன” என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். #EconomicCrisisLK எனும் ஹேஷ்டேகையும் தனது ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த ட்வீட்டைப் படித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த மருத்துவமனைக்கு உதவுமாறு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜெய்சங்கர் இலங்கை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

x