இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு


புதுடெல்லி: தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கிய இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து பகுதியை சேர்ந்த பர்மானந்த்தீப்சந்த் இந்துஜா கடந்த 1914-ம்ஆண்டில் இந்துஜா குழுமத்தை தொடங்கினார். இந்த குழுமத்துக்கு 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. சுமார்1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

பர்மானந்த் தீப்சந்த் இந்துஜாவின் மூத்த மகன் சந்த், 2-வது மகன் கோபிசந்த் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் வசிக்கின்றனர். 3-வது மகன் பிரகாஷ் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவிலும், 4-வது மகன் அசோக் மும்பையிலும் வசிக்கின்றனர்.

பிரகாஷ் இந்துஜா கடந்த 1980-ம்ஆண்டில் சுவிட்சர்லாந்தில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். ஜெனீவாவில் உள்ள அவரது வீட்டில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுவிட்சர்லாந்து சட்டங்களின்படி வீட்டு பணியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,600 ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஒரு நாளில் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும். அதில் ஒரு மணி நேரம் ஓய்வுவழங்க வேண்டும். ஓராண்டில் 4 வாரங்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

ஆனால் பிரகாஷ் இந்துஜா வீட்டில் பணியாற்றிய இந்திய தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.654 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 18 மணி நேரம் வரை பணியாற்ற நிர்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சில ஊழியர்கள் ஜெனீவா குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி சபீனா மாஸ்கோட்டா கடந்த 21-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதன்படி பிரகாஷ் இந்துஜா அவரது மனைவி கமாலுக்கு தலா 4.5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மகன் அஜய், மருமகள் நம்ரதாவுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பிரகாஷ் இந்துஜா வீட்டின் மேலாளர் நஜுபுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக பிரகாஷ் இந்துஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

x