உக்ரைன் போர்: மாறுகிறதா ரஷ்ய ஆதரவு நாடுகளின் நிலைப்பாடு?


சோவியத் ஒன்றியத்தில் முன்னர் இடம் பெற்றிருந்த மத்திய ஆசிய நாடுகள் இப்போதும் ரஷ்ய ஆதரவு நாடுகளாகத் தொடர்கின்றன. தங்களுடைய பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வணிகம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இவை ரஷ்யாவையே நம்பியிருக்கின்றன. உக்ரைன் விவகாரத்தில் இந்நாடுகளின் நிலைப்பாடு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

கண்டித்த உஸ்பெகிஸ்தான்

சில நாட்களுக்கு முன்னால் உஸ்பெகிஸ்தான் தெரிவித்த கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையும் வன்மம் மிக்க தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனின் சுதந்திரத்தையும் பிரதேச இறையாண்மையையும் உஸ்பெகிஸ்தான் அங்கீகரிக்கிறது. உக்ரைனுக்குள் ரஷ்யர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வசிக்கும் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் குடியரசுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என்று உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அப்துல் அஜீஸ் கமிலோவ் அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது கிட்டத்தட்ட ரஷ்யாவின் நிலைக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனமாகும்.

உஸ்பெகிஸ்தான் அதிபராக ஷவ்கத் மிர்சியோவேவ் 2016-ல் பதவியேற்றது முதல் ரஷ்யாவைவிட சீனாவுடனான வர்த்தக உறவு அதிகரித்தது. கடந்த ஆண்டு ரஷ்யாவைவிட சீனாவுடனான வர்த்தக அளவு அதிகமாகவே இருந்தது. ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய சகாவான தொழிலதிபர் அலிஷேர் உஸ்மானோவ், மிர்சியோவேவின் உறவினர். ரஷ்யத் தொழிலதிபராக இருந்தாலும் அவர் உஸ்பெகிஸ்தானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ஆசியாவின் பிற நாடுகளிலிருந்து தனித்தே செயல்பட்ட உஸ்பெகிஸ்தான் சுதந்திரமான பொருளாதாரக் கட்டமைப்பையும் அரசியல் அமைப்பையும் உருவாக்கிக் கொண்டது. எனவே ரஷ்ய சார்பு அதற்கு அவசியப்படவில்லை என்று தோன்றுகிறது.

கலையும் மவுனம்

ரஷ்யா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளாலும் காஸ்பியன் கடலாலும் சூழப்பட்டுள்ள மத்திய ஆசிய பிரதேசம் புவிஅரசியல் சார்ந்தும் ராணுவப் பாதுகாப்பு தொடர்பாகவும் முக்கியமான இடத்தில் இருப்பவை. கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவையே மத்திய ஆசிய நாடுகளாகும். சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகும்கூட இந்நாடுகள் ரஷ்யாவுக்கு அணுக்கமாகவே இருக்கின்றன. வெவ்வேறு நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டினாலும் ரஷ்யாவின் ஆதரவு இவற்றுக்கு அவசியம். உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தும் போரும் அதற்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளும் ரஷ்யாவைப் போலவே இந்த நாடுகளையும் பாதித்து வருகின்றன. விலைவாசி உயர்வு, அவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, வேலையிழப்பு, வருமான இழப்பு, பொருளாதார முடக்கம் ஆகியவை பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன. எனவே சுமார் ஒரு மாதமாக மவுனம் சாதித்த இந்த நாடுகள் ஒவ்வொன்றாக, போரை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சாதக பாதகங்கள்

ரஷ்யாவின் நெருக்கமான நண்பர்களாக இருப்பது தங்களுக்கு நன்மைகளைத் தருகிறது என்று நினைத்த இந்நாடுகள், ரஷ்யாவுடன் இணைந்திருப்பதால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியுள்ளன. இப்போதைக்கு ரஷ்யாவிடமிருந்து ஒரேயடியாக விலக முடியாது என்றாலும் தங்களுடைய பிரச்சினைகளைப் பேசத் தொடங்கியிருக்கின்றன. 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி மத்திய ஆசிய நாடுகளிலிருந்து 25 லட்சம் தொழிலாளர்கள் ரஷ்யாவில் புலம் பெயர் தொழிலாளர்களாக வேலைபார்க்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனர். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னமும் கூட அதிகம் என்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு மாதந்தோறும் அனுப்பி வைக்கும் தொகைதான் இந்த நாடுகளின் வருவாயில் பெரும்பகுதியாக இருந்தது. கிர்கிஸ்தானின் ஜிடிபியில் 31.3 சதவீதம், தஜிகிஸ்தானின் ஜிடிபியில் 26.7 சதவீதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு.

உக்ரைன் போருக்கு எதிராக கஜகஸ்தானில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உளப்பூர்வமாக இந்தப் போரைத் தாங்கள் எதிர்ப்பதையே கஜகஸ்தான் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. போர் காரணமாக காஸ்பியன் கடல் பகுதி வழியாக கச்சா பெட்ரோலிய எண்ணெயை கஜகஸ்தானால் ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கிறது. இது அந்நாட்டுக்குப் பெருத்த வருவாய் இழப்பைத் தந்து வருகிறது.

ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்க கிர்கிஸ்தான் தயங்கினாலும், இந்தப் போரை விரும்பவில்லை என்பதை உணர்த்தி விட்டது. தஜிகிஸ்தானும் துருக்மேனிஸ்தானும் இந்த விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் இரண்டையுமே ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

x