பாஸ்பரஸ் குண்டு வீசி மக்களைக் கொன்ற ரஷ்யா: உக்ரைன் அதிபர் வேதனை!


ரஷ்ய ராணுவத்தினர், இன்று காலை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி மக்களை ரஷ்யா கொன்றதாக நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.

நேட்டோ பிரதிநிதிகளிடம் இன்று காணொலி மூலம் உரையாடிய ஸெலன்ஸ்கி, “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ரஷ்யா எங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, அதேபோல உக்ரைன் மக்களையும் நகரங்களையும் காக்க, கட்டுப்பாடுகள் இல்லாத வகையில், ராணுவ உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

இதுவரை மேற்கத்திய நாடுகள் தற்காப்புக்காக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியதற்காக நன்றி சொன்ன அவர், இனி பதில் தாக்குதலுக்கான ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“உங்களிடம் உள்ள விமானங்களில் ஒரு சதவீதத்தை எங்களுக்குக் கொடுங்கள். ஒரு சதவீத டாங்குகளை எங்களுக்கு வழங்குங்கள்” என்று கோரிக்கை விடுத்த ஸெலன்ஸ்கி, “இன்று காலை பாஸ்பரஸ் குண்டுகள் ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்பட்டன. அவை ரஷ்ய பாஸ்பரஸ் குண்டுகள். பெரியவர்களும் குழந்தைகளும் அதில் கொல்லப்பட்டனர்” என்று வேதனை தெரிவித்தார்.

பாஸ்பரஸ் குண்டு வெடித்த பின்னர் அதிலிருந்து பரவும் பாஸ்பரஸ் துகள்கள், ஆக்சிஜனுடன் கலந்ததும் தீப்பற்றி எரியும் தன்மை கொண்டவை. இதன் மூலம் கடும் தீக்காயங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

x