9 மனிதாபிமான வழித்தடங்கள்: உக்ரைனியர்கள் உயிர் பிழைக்க வழிவகுக்குமா?


போர் நடக்கும் பகுதிகளில் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது, போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற வழிவகுப்பது போன்றவற்றை உள்ளடக்கிய நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ரஷ்யாவின் தாக்குதலில் உருக்குலைந்துவரும் உக்ரைனிலிருந்து மக்கள் பத்திரமாக வெளியேற 9 மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடங்களை ஏற்படுத்த இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் இன்று (மார்ச் 23) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் வழியாக மக்கள் வெளியேறுவார்கள் எனத் தெரிகிறது.

இந்தத் தகவலை உக்ரைன் துணைப் பிரதமர் இரைனா வெரெஸ்சுக் தெரிவித்திருக்கிறார். எனினும், மரியுபோல் நகரின் மையப் பகுதியிலிருந்து மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்துவது குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அந்நகரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துவருகிறார்கள்.

ஏற்கெனவே, மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடங்களை ஏற்படுத்த சண்டை நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டு பின்னர் மீண்டும் தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்தது. இப்படி வாக்கு கொடுத்துவிட்டு அதை மீறுவதை ரஷ்யா தொடர்ந்துவரும் நிலையில், தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை வெற்றிகரமாக அமையுமா எனும் கேள்வியும் எஞ்சியிருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தல் வரும்பட்சத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியிருக்கிறார்.

x