பலூசிஸ்தானில் அதிகரிக்கும் போராளிக் குழுக்கள்!


இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தாமல் மறைமுகமாக ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு, பலூசிஸ்தானில் நிகழ்ந்துவரும் புதிய தாக்குதல்கள் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 26 முதல் இது தொடங்கியது. பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்) என்ற அமைப்பினர் பாகிஸ்தானின் துணை நிலை ராணுவப் படையான எல்லைப்புறக் காவல் படையின் காவல் சாவடியைத் தாக்கி 10 வீரர்களைக் கொன்றனர். கேச் மாவட்டத்தின் தஷ்ட் என்ற பகுதியில் இத்தாக்குதல் நடந்தது.

ஜனவரி தொடங்கி பலூசிஸ்தானில் செயல்படும் பல்வேறு போராளிக் குழுக்கள் 17 பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. அவற்றில் 10 தாக்குதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரானவை. இந்தத் தாக்குதல்களில் 51 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் எல்லைப்புறப் பாதுகாப்புப் படை (எஃப்.சி) காவல் கண்காணிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பலூசிஸ்தான் விடுதலை சேனை (பிஎல்ஏ) என்ற அமைப்பும், அது உருவாக்கியுள்ள மஜீத் பிரிகேட் என்ற குழுவும் மட்டும் இந்த ஆண்டு 8 தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. பலூசிஸ்தானின் நுஷ்கி, பாஞ்ச்கர், சிபி மாவட்டங்களில் இத்தாக்குதல்கள் நிகழ்ந்தன. பலூச் மாகாணத்தில் ஒன்றல்ல பல போராளிக் குழுக்கள் இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றன. பலூச் விடுதலை சேனை, பலூச் குடியரசு சேனை (பிஆர்ஏ), பலூச் குடியரசு காவல்படை, ஐக்கிய பலூச் சேனை (யுபிஏ) ஆகியவை சில. இவற்றில் பலூச் விடுதலை முன்னணியும், பலூச் ராஜி ஆகோஜ் சாங்கர் குழுவும் வெவ்வேறு குழுக்களுக்கான தலைமை குடை அமைப்புகள். இவற்றின் தாக்குதல்கள் அனைத்தும் பலூச் மாகாணத்துக்குள்ளேதான் நடந்துள்ளன. ஆனால் பலூச் தேசிய சேனை (பிஎன்ஏ) என்ற அமைப்பு முதல் முறையாக லாகூரில் குண்டுவெடிப்புச் சம்பவம் மூலம் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில், மஜீத் பிரிகேட் என்ற அமைப்பு பாஞ்ச்கர், நுஷ்கி மாவட்டங்களில் உள்ள எல்லைப்புறப் படையின் முகாம்கள் மீதே தாக்குதல்களை நடத்தியது. இந்த முகாம்களுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து உள்ளிருந்த வீரர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். மார்ச் மாதத்தில் சிபி மாவட்டத்தில் மட்டும் 3 தாக்குதல்களை இதுவரை நிகழ்த்தியுள்ளனர். உள்ளூர் திருவிழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்களைக் குறிவைத்து தற்கொலைப்படை பாணியில் ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்ததில், எல்லைப்புறக் காவல் படையின் 6 அதிகாரிகள் இறந்தனர். ஐஎஸ்-கே என்ற தீவிரவாத அமைப்பு, இதைச் செய்ததாக பிறகு அறிவித்தது. சங்கம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த எல்லைப்புறப் படையின் வாகனங்களைச் சாலையோரம் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததில் 4 வீரர்கள் இறந்தனர். பலூசிஸ்தான் விடுதலை சேனை அமைப்பினர் இதற்குப் பொறுப்பேற்றனர். பலூசிஸ்தான் பகுதியில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதால் தீவிரவாதக் குழுக்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்தச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தத் தீவிரவாத குழுக்களின் முக்கியமான தலைவர்கள் ஆப்கானிஸ்தானில்தான் இப்போது ஒளிந்திருக்கின்றனர். தாலிபான்கள் அவர்களை விரட்டத் தயக்கம் காட்டுகின்றனர். பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ள டிடிபி என்ற பாகிஸ்தானிய தாலிபான்கள் அமைப்புடன் இந்தத் தீவிரவாதக் குழுக்கள் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. பலூசிஸ்தான் இன மக்கள் ஆப்கானிஸ்தானிலும் கணிசமாக வாழ்கின்றனர். எனவே எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படக்கூடும் என்பதால் பாகிஸ்தான் அரசு தயங்குகிறது.

முன்பெல்லாம் பலூசிஸ்தான் விடுதலைக்காகப் போராட ஏற்பட்ட குழுக்கள் இனக் குழுப் பெரியவர்களாலும் ஓரளவுக்குப் பண வசதி படைத்தவர்களாலும் இயக்கப்பட்டன. எனவே அவர்கள் பலூசிஸ்தான் விடுதலைக்காக என்று போராடினாலும், பாகிஸ்தான் அரசோ ராணுவமோ ஏதாவது பரிசுப் பொருட்களையும் சலுகைகளையும் தந்து சமரசம் பேசினால் வழிக்கு வந்துவிடுவார்கள். இப்போது படித்த இளைஞர்களும் நடுத்தர மக்களும் போராளிக் குழுக்களில் நிறைந்துள்ளனர். அவர்கள் பலூசிஸ்தான் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சமூக முன்னேற்றத்துக்காகவும் ஆயுதம் எடுத்துப் போராடுவதே இறுதியான வழி என்று தீர்மானித்துள்ளனர். இவர்கள் மத வழிப்பட்ட சித்தாந்தங்களையோ வலதுசாரி கொள்கைகளையோ ஆதரிப்பவர்கள் அல்ல. பலர் மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்தவர்கள். காரியவாதிகள். எனவே ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலையையும் பிறகு வளர்ச்சியையும் காண விழைகின்றனர். எங்கெல்லாம் தங்களுக்கு ஆதரவு கிட்டுகிறதோ அவற்றையெல்லாம் பெற்று, அரசுக்கு எதிராகப் போராடுவதே விடுதலைக்கான வழிமுறை என்று கருதுகின்றனர். பாகிஸ்தானுக்கு இந்தப் புதிய குழுக்கள் நிச்சயம் பெரிய தலைவலிதான்.

x