ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த திட்டமிடுவது உறுதி!


“உக்ரைன் ராணுவம் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதாக ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டு, அந்த ஆயுதங்களை ரஷ்யாவே உக்ரைன் மீது பிரயோகிக்கப்போவதற்கான தெளிவான சமிக்ஞை” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடந்த ‘பிசினஸ் ரவுண்ட்-டேபிள்’ எனும் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பைடன், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிடுவது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறிவரும் கருத்துகளை எதிரொலித்தார்.

“புதின் தற்போது தோல்வியை எதிர்கொண்டிருப்பதால், எதையேனும் செய்தாக வேண்டும் எனும் நிலையில் இருக்கிறார். எனவே, தவறான செய்திகளைப் பரப்பிவருகிறார். ஐரோப்பாவில் ரசாயன ஆயுதங்களும் அமெரிக்காவில் உயிரியல் ஆயுதங்களும் இருப்பதாக அவர் கூறியிருப்பது நிச்சயம் உண்மை அல்ல. நான் உத்தரவாதம் தருகிறேன்” என்றார் பைடன்.

மேலும், “உக்ரைனிடம் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. இது அந்த இரண்டுவகை ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா பரிசீலிப்பதற்கான தெளிவான சமிக்ஞைதான். புதின் கடந்த காலத்தில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியவர். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் பைடன் கூறினார்.

உக்ரைனில் ரஷ்யா போர்க்குற்றம் நிகழ்த்தியிருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியிருக்கும் நிலையில், பென்டகன் அதிகாரிகளிடம் இதுகுறித்து பைடன் பேசியிருக்கிறார்.

உக்ரைன் மீதான ஊடுருவலை நிறுத்துமாறு ரஷ்யாவை ஐநா சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ரஷ்யா போர்க் குற்றம் நிகழ்த்தியது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தலைமை வழக்கறிஞர் விசாரணையைத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

x