எங்கும் சூழ்ந்த இருள்... எப்படி மீளும் இலங்கை?


இலங்கை மக்கள் மனதில், கடந்த இரண்டு வருடங்களாகக் கனன்று கொண்டிருந்த எரிமலை உச்சகட்ட உஷ்ணத்துடன் வெடித்திருக்கிறது. பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு, காய்கறி முதல் பால் பவுடர் வரை அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு என அல்லாடிக்கொண்டிருந்த மக்கள், அரசுக்கு எதிராகப் போராட வீதிக்கு வந்துவிட்டனர். பொதுவாகவே போராட்டங்களிலிருந்து விலகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் சாலையில் இறங்கிப் போராடுவது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மார்ச் 15-ல், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஒருங்கிணைத்த போராட்டத்தில் அக்கட்சித் தொண்டர்களுடன் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர். தீயில் வாட்டப்பட்ட பிரெட் துண்டுகளைக் கையில் வைத்திருந்த சாமானியர் ஒருவரின் படம் சமூகவலைதளங்களில் வைரலானது. அதிபர் மாளிகைக்கு அருகே ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். போராட்டத்துக்குத் தலைமை வகித்த சஜித் பிரேமதாசா இது ஒரு தொடக்கம்தான் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்னர் இல்லாத எதிர்ப்பு

அரசியல் கட்சிகளின் அழைப்பின் பேரில் மட்டுமல்ல, போதிய உணவு வாங்க முடியாமல் பசியுடன் உழன்றுகொண்டிருக்கும் மக்கள் சுயமாகவே திரண்டு ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் இப்படிப் பெரிய அளவில் இதற்கு முன் அணிதிரண்டதில்லை.

2.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இலங்கை, அத்தியாவசியமான பல பொருட்களுக்கு இறக்குமதியையே சார்ந்திருக்கிறது. ஆனால், கோத்தபய ராஜபக்ச அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்நியச் செலாவணி கையிருப்பில் 70 சதவீதத்தை இலங்கை இழந்திருக்கிறது. உணவுப் பொருட்கள் முதல் பெட்ரோல், டீசல் வரையிலான அனைத்து இறக்குமதிகளுக்கும் அந்நியச் செலாவணி முக்கியம் என்பதால், இறக்குமதி கடுமையாக அடிவாங்கியிருக்கிறது.

இலங்கையின் ஜிடிபி-யில் 10 சதவீதமாக இருக்கும் சுற்றுலாத் துறை கரோனா பெருந்தொற்று காரணமாக ஸ்தம்பித்தது. கரோனா பரவல் தொடங்கியதைத் தொடர்ந்து, 2020 ஏப்ரல் மாதம் முதல் பலரது சம்பளம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கை, அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து 1 பில்லியன் டாலரை எடுத்துக் கொடுத்துச் சமாளித்தது. எனினும், பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

இதற்கிடையே, இயற்கை விவசாயத்தை முழுமையாகப் பின்பற்றும் முதல் நாடாக இலங்கையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய கோத்தபய, பின்விளைவுகளைப் பற்றித் தெரியாமல், ரசாயன உரங்களைப் பயன்படுத்தவும், இறக்குமதி செய்யவும் தடைவிதித்தார். இதனால் விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது. அதன் உச்சத்தைத்தான் இலங்கை இன்று எதிர்கொள்கிறது.

பலன் தருமா என உறுதியாகத் தெரியாமல் பணத்தைக் கொட்டி உருவாக்கிய பல திட்டங்கள் இன்றைக்கு எந்தப் பிரயோஜனமும் இன்றி கிடக்கின்றன. பல மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட மத்தல ராஜபக்ச விமான நிலையம் சர்வதேச அளவில் மிகத் தனிமையான விமான நிலையம் என்றே அழைக்கப்படும் அளவுக்குப் பயனற்றுக் கிடக்கிறது. டென்மார்க்கிடமிருந்து பெரும் தொகையைக் கடனாகப் பெற்று உருவாக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம், சீனா குத்தகைக்கு எடுத்து மேம்படுத்தப்பட்ட அம்பன்தோட்ட துறைமுகம் என ஏகப்பட்ட விரயச் செலவுகள், மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கின்றன.

என்னென்ன விளைவுகள்?

வேலைக்குச் செல்ல சொந்த வாகனங்களை நம்பியிருப்பவர்கள், வாடகை வண்டி ஓட்டி பிழைப்பு நடத்துபவர்கள் என அனைவரும் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ள மணிக்கணக்கில், சில சமயம் நாள் முழுக்க பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கின்றனர். காத்திருப்பின் வலியும் வேதனையும் வரிசையில் நிற்கும் மக்களின் வார்த்தைகளில் எதிரொலிக்கின்றன.

டீசல் பற்றாக்குறை காரணமாக, மின்சக்தி நிலையங்களில் மின்னுற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினை இலங்கையின் தொழில் துறையில் பேரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லை இது. சிலோன் மின் வாரியம் முறைப்படி அறிவித்துதான் இதை அமல்படுத்துகிறது. மார்ச் 5-ம் தேதியுடன் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலைமை சீராவதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. பெரிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள் தொடங்கி தையலகங்கள், அடுமனைகள், அழகுக்கலை நிலையங்கள் என இந்த மின்வெட்டால் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தொழில்முனைவோரின் பரிதாபக் கதை சொல்லி மாளாது. மருந்து உற்பத்தியும் பாதிப்பைச் சந்தித்திருப்பதால், நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் இடையே மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து அரசுக்கு உதவுமாறு கேட்கிறார் அதிபர்.

பிரச்சினை இத்துடன் முடிந்துவிடாது. இலங்கையில் கரோனா பரவல் குறைந்திருந்தாலும், போராட்டங்களில் மக்கள் திரளாகக் கலந்துகொள்வதும், பண்டிகைக் காலம் என்பதாலும் மீண்டும் தொற்று அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையின் துணைப் பொது இயக்குநர் டாக்டர் ஹேமந்தா ஹெராத் எச்சரித்திருக்கிறார். பெட்ரோல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பொதுப்போக்குவரத்தில் கடும் நெரிசலுக்கு இடையில்தான் பெரும்பாலானோர் செல்ல வேண்டியிருக்கிறது. தொற்று அதிகரிக்க இதெல்லாம் முக்கியக் காரணிகளாகலாம் எனும் அச்சம் இப்போது எழுந்திருக்கிறது.

யார் பொறுப்பு?

இதற்கிடையே மார்ச் 17-ல், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தன் மீது தவறு இல்லை என நிறுவ முயற்சித்திருக்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. தனது நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், தற்போது நிலவும் நெருக்கடிக்கு வித்திட்டிருப்பவர்களே மக்கள் முன்னிலையில் தனது அரசை விமர்சிப்பதாகப் பேசியிருக்கிறார். பிற நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

“நீங்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். அனைவரும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் இழைக்க மாட்டேன்” என்றெல்லாம் உருக்கமாகப் பேசியதன் மூலம், மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியே எல்லாவற்றையும் செய்ததாக நிறுவவும் அவர் முயல்கிறார். தேசிய பொருளாதார கவுன்சிலையும், அதற்கு உதவும் வகையில் ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்திருப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்புகிறார்.

அரசியல் சூழல்

“கடந்த இரண்டு ஆண்டுகளாகத் துன்புற்று வருகிறீர்கள். இனியும் உங்களால் துன்பப்பட முடியுமா?” என மக்களிடம் சஜித் பிரேமதாசா எழுப்பிய குரலில், அரசியலும் கலந்திருக்கிறது. 2019-ல் ஆட்சிக்கு வந்தபோது கோத்தபயவுக்கு இருந்த செல்வாக்கு, தற்போது சரிந்துவிட்டது. சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசின் செயலற்ற தன்மையால் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அதேசமயம், எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதுபோல, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதும், அத்தனை எளிதல்ல. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவான மனநிலையைப் பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். தவிர போராட்டங்களிலும்கூட எதிர்க்கட்சிகளிடையே ஓர் ஒருங்கிணைப்பு இல்லை.

பிரதமர் மோடியைச் சந்தித்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச

இந்தியா கடனுதவி

இதற்கிடையே, இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்திருந்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மார்ச் 16-ல் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். நட்பார்ந்த இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று மோடியும் நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஒரு பில்லியன் டாலர் (7,500 கோடி ரூபாய்) கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்க 500 மில்லியன் டாலரை இந்தியா வழங்கியிருந்தது. அதேபோல், சார்க் அமைப்பின் மூலம் 400 மில்லியன் டாலரையும் இலங்கைக்கு வழங்கியிருந்தது. இவற்றை வைத்து உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

சம்மதித்த பன்னாட்டு நாணய நிதியம்

2020 தேர்தல் சமயத்திலேயே பன்னாட்டு நாணய நிதியத்திடம், 4 பில்லியன் டாலர் கடனுதவி கேட்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறிவருகிறார். பிற நாடுகள் பன்னாட்டு நாணய நிதியத்திடம் உதவி பெற்ற நிலையில், இலங்கை அதைச் செய்யாதது தவறு என்று அவர் வாதிடுகிறார்.

ஆரம்பத்தில் இதைக் கண்டுகொள்ளாத கோத்தபய அரசு தற்போது அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. மார்ச் 17-ல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதை அதிபர் உறுதிப்படுத்தியிருந்தாலும், இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால், அதற்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். இந்த முரண் பலரால் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு நாணய நிதியம்

வர்த்தகப் பற்றாக்குறையில் 14 சதவீதத்தைக் குறைப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 6.9 பில்லியன் டாலர் தொகை இருந்தால்தான், இந்த ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் எனும் சூழல். எனவே, கடனைத் திருப்பிச் செலுத்த சீனா போன்ற நாடுகளிடம் கால அவகாசம் கோரும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கைக்கு உதவ பல்வேறு காரணங்களை முன்வைத்து தயக்கம் காட்டிவந்த பன்னாட்டு நாணய நிதியம், தற்போது கோத்தபய வெளிப்படையாக உதவி கோரியிருப்பதால் அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்கிறது. அடுத்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்கா செல்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைப்பட்ட காலத்தில், பேரியல் பொருளாதார நிர்வாகத்தில் தொடர்ச்சியான, நம்பகத்தன்மை அளிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்நியக் கடனை அடைப்பதற்கான பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியிருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியம் விதிக்கும் வட்டி குறைவுதான் என்றாலும், நிர்வாகச் செலவைக் குறைப்பது என்பன உட்பட அந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகள் இலங்கைக்கு இன்னொரு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

x