‘நண்பர்’ மோடி அழைப்பு: இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்!


இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்

இந்தியா - இஸ்ரேல் இடையிலான தூதரகத் தொடர்புகள் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் பங்கேற்க ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்.

2021 ஜூன் மாதம், நஃப்தாலி பென்னட் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ‘‘இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னட்டுக்கு வாழ்த்துகள். இந்தியா - இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்டு 2022-ம் ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்தத் தருணத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன்’’ என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும் மோடி தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

அதேபோல, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள யாயிர் லாபிட் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவை மேம்படுத்த இஸ்ரேலின் புதிய அரசு ஒத்துழைக்கும்” என்று கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின்போதும், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட்டைச் சந்தித்த பிரதமர் மோடி இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன், பிரதமர் மோடி


‘மோடி எனது நண்பர்’

இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில், அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு முதன்முறையாகச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வழிநடத்துவதில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவை மீண்டும் தொடங்கியவர் மோடி. அது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. தனித்தன்மை கொண்ட இந்திய மற்றும் யூதக் கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பு ஆழமானது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணையம், வேளாண்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

x