உக்ரைன் போரில் உருக்குலையும் தளிர்கள்!


“பியானோ வாசிக்க ஆரம்பித்ததும் போரை நான் மறந்துபோகிறேன்” என்று ஒன்பது வயது உக்ரைன் சிறுவன் மாக்சிம் உதிர்த்த சொற்கள் மனதை உலுக்கக்கூடியவை. உலகம் அறியா வயதில் ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தின் கொடூரமான விளைவுகளை மாக்சிம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறான்.

கிழக்கு உக்ரைனில் போரினால் தந்தையைப் பிரிய நேர்ந்த அவனையும் அவனது தம்பியையும் அழைத்துக் கொண்டு தப்பியோடி மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரில் தஞ்சமடைந்திருக்கிறார் மாக்சிமின் தாய். அந்நகரில் தற்காலிக அகதிகள் முகாமாக மாற்றப்பட்டிருக்கும் 'அகாடமிக் தியேட்டர்' எனும் இசையரங்கத்தில் தற்போது மாக்சிமும் அவனது தாய், தம்பியும் தங்கியுள்ளனர். போர் இல்லாதிருந்தால் தனது ஊரிலேயே மாக்சிம் இந்நேரம் பியானோ கச்சேரி செய்திருப்பான்.

ஆனால், யுத்தம் அவர்களை நிர்க்கதியாகிவிட்டது. அந்த நெருக்கடியிலும், தான் அதுவரை கற்றுக்கொண்ட இசைக் குறிப்புகளையும், சுருட்டி பையில் வைத்துக் கொள்ளக்கூடிய கீபோர்ட் இசைக் கருவியையும் தன்னுடன் பத்திரமாக எடுத்துக் கொண்டான் மாக்சிம். எதேச்சையாக அவனுக்கு தஞ்சமளித்தது அந்த இசையரங்கம். அங்கு வந்து சேர்ந்த பிறகு தன்னைபோல அகதியாக்கப்பட்ட பல குழந்தைகளையும், பெண்களையும் ஆற்றுப்படுத்த மாக்சிம் பியானோ இசைத்தான். அந்த கணத்தில் அவனது மனதிலிருந்து வெளிப்பட்ட சொற்கள்தான் மேலே சொன்னவை.

சிறுவன் மாக்சிம் லிவிவ் நகரை வந்தடைந்தபோது அதிர்ஷ்டவசமாக அவனுக்கும், அவனது தம்பிக்கும் சிறிய சிராய்ப்புகூட ஏற்படவில்லை. ஆனால், அவன் மனமுருகி பியானோ இசைத்துக் கொண்டிருந்த வேளையில் அதே லிவிங் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படுகாயங்களுடனும் உயிருக்குப் போராடும் நிலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னமும் முடிவுக்கு வராததால் உக்ரைனில் 75 லட்சம் குழந்தைகளின் வாழ்க்கையும் நலனும் அபாயத்திலுள்ளது.

போரில் இதுவரை 97 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கனடா நாடாளுமன்ற கூட்டத்தில் மனம் வெதும்பி அறிவித்தார். காலங்காலமாக யுத்தத்தில் ஈடுபடுகிறவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களும் , குழந்தைகளும் தான் அதன் படுபாதகமான விளைவுகளுக்கு இரையாகிறார்கள். அதிலும், தன்னை தற்காத்துக் கொள்ளக்கூட அறியாத இளம் தளிர்கள் கொல்லப்படுவதும், படுகாயமடைவதும், மீளா அதிர்ச்சிக்குள்ளாவதும் போரெனும் வன்முறையின் கோரமான முகங்களில் ஒன்று.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் நிஜ கோரம் இப்போது தான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், கடந்த எட்டாண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரத்தாலும் போர்களாலும் உக்ரைன் சிக்குண்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிறார்கள் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யப் படையினரால் உக்ரைன் மக்களுக்கு ஆபத்தில்லை என்று வாய்வார்த்தையாக ரஷ்ய அதிபர் புதின் பேசினாலும் உக்ரைனில் உள்ள எண்ணற்ற வீடுகள், பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் தொடர் தாக்குதலில் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் 15 லட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் வீட்டைவிட்டு நாட்டைவிட்டுத் தப்பித்தோடும் கொடுமை நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.

”கடந்த 20 நாட்களில் தினமும் 70 ஆயிரம் உக்ரைன் குழந்தைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். நிமிடத்துக்கு 55 உக்ரைன் குழந்தைகள் பெற்றோருடனோ அல்லது ஆதரவற்றோ உக்ரைனைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்” என்று யூனிசெப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் அகதிகளாகப்படுவது இதுவே முதல்முறை என்றும் யூனிசெப் ஆவணப்படுத்தியுள்ளது. இப்படி அல்லாடித் தப்பித்தோடி இடம்பெயரும் குழந்தைகளில் பலர் போகும் வழியிலேயே குடும்பத்தைப் பறிகொடுத்துவிடுகின்றனர். சிலர் வழிதவறி குடும்பத்தைவிட்டுப் பிரிந்து காணாமல் போகின்றனர். சிலர் வன்முறையில் சிக்கிக் கொள்கின்றனர். சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சிலர் கடத்தப்பட்டு வாழ்வைத் தொலைக்கின்றனர். யுத்தத்தின் விளைவாகக் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உரிய மருத்துவ உதவிகளைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயிர் பயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதால் அவர்கள் தஞ்சமடையும் நாடுகளில் மருத்துவமனை, மருத்துவச் சிகிச்சைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தொற்று வியாதிகளும் வேகமாகப் பரவி வருவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் குன்றிவருவதாகவும், கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கானோர் முண்டியடித்து வெளியேறுவதால் கரோனா பெருந்தொற்று மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. இதனாலும் அப்பாவி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுதான் இதில் பரிதாபம். போலாந்தின் தலைநகரம் வார்சாவுக்கு அகதிகளாக வந்து சேரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கரோனா தொற்று இருப்பதாக வார்சாவ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் குழந்தை நலமருத்துவப் பிரிவு தலைவர் ஏர்னஸ்ட் குச்சார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார மையத்தின் ஐரோப்பாவுக்கான இயக்குநர் ஹான்ஸ் க்ளட்ஜ், ”தஞ்சமடையவந்த மக்களின் மருத்துவ தேவைகளுக்கு போலாந்து, சுலொவாக்கியா, ரொமானியா, மொல்டோவா ஆகிய நாடுகள் ஓரளவு ஈடுகொடுத்து வருகின்றன. ஆனால், நிலைமை ரொம்பகாலம் கட்டுக்குள் இருக்காது. ஓரிரவில் மருத்துவமனைகளின் படுக்கைகள், மருத்துவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிவிட முடியாது. ஏற்கெனவே கோவிட் 19 பெருந்தொற்றினால் மருத்துவ சுகாதார அமைப்பு முழுவதுமாக சோர்வடைந்துள்ளது” என்று அச்சம் தெரிவித்தார். குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவ வார்டுகள் வான்வழிக் குண்டு தாக்குதலால் தகர்ந்து போகாதபடி பதுங்கு குழிகளுக்குள் அமைக்கப்பட்டிருப்பது பிரச்சினையின் தீவிரத்தை இன்னும் ஆழமாக உணர்த்தும்.

உக்ரைன் எல்லையோர பகுதிகளில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான பெட்டிகளையும், அவசர மருத்துவ சேவைகளுக்கான ஏற்பாட்டையும், ஆம்புலன்ஸ் வண்டிகளையும் சர்வதேச மனிதநேய அமைப்புகள், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கையாகத் தயார் நிலையில் வைத்துள்ளன. ஆனால், ஹங்கேரி, போலாந்து சுலோவாக்கியா, மொல்டோவா எல்லையோரப் பகுதிகளில் இதுவரை தற்காலிக மருத்துவமனைகள்கூட உருவாக்கப்படவில்லை என்று ஐநா அகதிகள் முகமை எச்சரித்துள்ளது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டுமே. அதுவரை குறைந்தபட்சம் பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதல் நடத்துவதை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். தங்களது நாட்டின் அதிகார பலத்தைக் காட்டுகிறேன் எனக் கொக்கரித்தபடி நடத்தப்படும் யுத்தங்கள் ஏதுமறியா குழந்தைகளின் வாழ்க்கையை உருகுலைப்பது அநீதியின் உச்சம்!

x