கோவிட்- 19: ஓராண்டுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் உயிரிழப்புகள்


கரோனா தொற்றின் பிறப்பிடமான சீனாவில், ஓராண்டுக்குப் பின்னர் முதன்முறையாகக் கரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வட கிழக்கு மாகாணமான ஜிலின் மாகாணத்தில் கரோனா தொற்றால் இருவர் உயிரிழந்திருப்பதாக சீன அரசு இன்று (மார்ச் 19) தெரிவித்திருக்கிறது. இதன் மூலம், அந்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,638 ஆக உயர்ந்திருக்கிறது.

2021 ஜனவரி 26-ல் பதிவான மரணங்களுக்குப் பின்னர், அந்நாட்டில் முதன்முதலாகப் பதிவாகியிருக்கும் மரணங்கள் இவை. இன்றைய நிலவரப்படி அந்நாட்டில் 4,501 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். கூடவே, ஒமைக்ரான் பரவல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவலை முற்றிலும் ஒழிக்க ‘ஜீரோ-கோவிட்’ வியூகத்தைச் சீன அரசு கண்டிப்புடன் பின்பற்றுகிறது. ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் ஜிலின் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாகாணத்தைவிட்டு வெளியில் செல்ல விரும்புபவர்கள் காவல் துறையின் அனுமதி பெற்றாக வேண்டும். கரோனா நோயாளிகளுக்கென பிரத்யேகமான 8 மருத்துவமனைகள், 2 தனிமைப்படுத்துதல் முகாம்கள் ஆகியவற்றை ஜிலின் மாகாண அரசு உருவாக்கியிருக்கிறது.

ஹாங்காங்கில் கரோனா பரவல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் பலர் தொற்றுக்குள்ளாகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

x