எதற்கும் தயாரான ’மக்கள் சேவகன்!’


வொலோடிமிர் ஸெலன்ஸ்கி

’சண்டையை தொடங்கி வைத்தது அவர்களாக இருக்கலாம்; ஆனால், அந்த சண்டையை முடித்துவைப்பது நாமாக இருப்போம்’ உக்ரைன் அதிபர் தேர்தலுக்கான (2019) பிரச்சார களத்தில், அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி உச்சரித்த மந்திர வாசகங்களில் இதுவும் ஒன்று. தசாப்தங்களாக ரஷ்யாவுடன் தொடரும் உரசலை மனதில் வைத்து அவர் சொன்ன இந்த திரு வாசகம், தற்போதைய உக்ரைன் போர்ச் சூழலில் உக்ரைனியர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படுகிறது.

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படை, தங்கள் இறுதிக்கட்டத் தாக்குதலாக அதிபர் ஸெலன்ஸ்கிக்கு குறிவைத்துள்ளது. முன்னதாக ஸெலன்ஸ்கியை கொல்ல ரஷ்யா மேற்கொண்ட 3 ரகசிய நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஸெலன்ஸ்கி முடிந்தால் போர் முடிந்தது என்று ரஷ்யா நம்புகிறது. ஆனால், 2 நாளில் உக்ரைன் வீழும் என்ற மிதப்பில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கிய ரஷ்யா, 2 வாரங்களைக் கடந்த பின்னரும் உக்ரைனில் திணறி வரும் வினோதத்தை உலக நாடுகள் ஆச்சரியமாய் கவனிக்கின்றன. இதன் பின்னணியில் அரசியல் அறிவற்றவராகவும், நகைப்புக்குரியவராகவும் உலக நாடுகளால் ஒதுக்கப்பட்டிருந்த அதிபர் ஸெலன்ஸ்கியின் மறுபக்கம் வெளிப்பட்டு வருகிறது.

’ஓடவோ, ஒளியவோ மாட்டேன்’

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸெலன்ஸ்கி சில தினங்களுக்கு முன்னர் தனது லொகேஷனை பகிரங்கமாக பகிர்ந்தார். இதன் மூலம் ’நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை...’ என்று ரஷ்ய படைகளுக்கு அறைகூவல் விடுத்தார். அவரது இந்த துணிச்சல் ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் தொடங்கும் முன்பிருந்தே வெளிப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் பகிரங்க ராணுவ தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்தினம் நாட்டை விட்டு குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லுமாறும், அங்கிருந்தவாறு உக்ரைன் போரை ரிமோட் கன்ட்ரோலில் இயக்குமாறும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஸெலன்ஸ்கிக்கு யோசனை வழங்கின. அதற்கு பதிலாக ‘அடைக்கலம் வேண்டாம் ஐயா; தயவுசெய்து ஆயுதம் கொடுங்கள். எங்கள் தாய் மண்ணுக்காக போராடப் போகிறோம்’ என்று ஸெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தது உலகை உலுக்கிப் போட்டது.

ஸெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்வதற்கு என ரஷ்ய ராணுவத்தின் போர்வையில் பணியமர்த்தப்பட்டுள்ள கூலிப்படையின் நோக்கம் ஒருவேளை நிறைவேறக்கூடும். அப்படி நடந்தால் சமூக ஊடக காலத்து இன்றைய உலகம் முதல் முறையாக, தாய்நாட்டுக்காக தீரத்துடன் போரிட்ட ஒரு தலைவனை தரிசித்திருக்கும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலகளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்த உக்ரைன் போரில், ஸெலன்ஸ்கியின் ஒவ்வொரு நகர்வும், அவர் உதிர்க்கும் வாசகமும் வரலாற்றுச் சுவடுகளாகி வருகின்றன.

மக்களின் சேவகன் தொலைக்காட்சித் தொடரில் ஸெலன்ஸ்கி

அதிபரானது விபத்து

’மக்களின் சேவகன்’ இதுதான் ஸெலன்ஸ்கி கட்சியின் பெயர். உக்ரைனின் பிரபல நகைச்சுவை நடிகரான இவர், இதே தலைப்பில் (சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள்) தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்து வந்தார். வரலாற்று பாடம் கற்பிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர், ஊழலில் திளைத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடித்துக் கிளம்புவார். ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராட ஆரம்பிப்பார். அவர் மீதான அபிமானம் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரிக்க, ஏகோபித்த ஆதரவால் நாட்டின் அதிபராக்கி அழகு பார்ப்பார்கள். இந்த தொலைக்காட்சித் தொடரின் கதையில் பெரிய மாற்றங்களின்றி, ஸெலன்ஸ்கியின் அரசியல் வாழ்க்கையும் அமைந்துபோனது இன்னொரு சுவாரசியம்.

நிதர்சனத்தில் ரஷ்யாவின் ஆதரவோடு அப்படியான ஊழல் ஆட்சி உக்ரைனில் அப்போது இருந்தது. ஆட்சியை விமர்சிக்கும் தொலைக்காட்சித் தொடருக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்ததை அடுத்து, ஆட்சியாளர்களால் ஸெலன்ஸ்கிக்கு நெருக்கடி எழுந்தது. அந்த நெருக்கடியே அவரை நேரடி அரசியலுக்கும் நெட்டித் தள்ளியது. செர்னோபில் அணு உலை விபத்துக்கு அடுத்தபடியாக உக்ரைன் சந்திக்கும் மோசமான விபத்து என்று, ஸெலன்ஸ்கியின் பதவியேற்பின்போது எதிர்கட்சிகள் விமர்சித்தனர். அரசியல் அனுபவம் அறவே இல்லாத, மக்களை சிரிக்க, ரசிக்க வைத்ததற்கு அப்பால் எந்த வகையிலும் கவர்ந்திராத ஒருவர், உக்ரைனின் அதிபராவது குறித்து நடுநிலையாளர்களும் கவலை தெரிவித்தனர்.

ரஷ்யர்களும் ரசித்த நடிப்பு

தெற்கு உக்ரைனில் சிறுபான்மை இன யூதர்களின் மத்தியில் பிறந்தவர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி. இவரது தாத்தா சோவியத் ரஷ்யாவின் செம்படையில் இணைந்து தாய்மண்ணுக்காக போர்க் களம் கண்டவர். தாத்தாவின் 3 சகோதரர்கள், நாஜிக்களின் இன அழிப்பில் படுகொலையானவர்கள். அப்படி இரண்டாம் உலகப்போரின்போது யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை ஸெலன்ஸ்கி கேட்டே வளர்ந்தது பின்னாளில் வேறாக வெளிப்பட்டது.

போரும், வாழ்க்கையும் குறித்த அழுத்தமான சித்தரிப்புகளை ரசிக்கும்படியான நகைச்சுவையுடன் உள்ளடக்கிய அவரது கல்லூரி பருவத்து நாடகங்கள் மேடையேறியபோது ஏகோபித்த வரவேற்புக்கு ஆளாகின. அந்த கைத்தட்டல்களே, சட்டப்படிப்பு முடித்த ஸெலன்ஸ்கி நாடகமே வாழ்க்கை என முடிவெடுக்க காரணமானது. தொடர்ந்து தொலைக்காட்சிகள் ஸெலன்ஸ்கியின் திறமைகளுக்கு அடுத்த தளம் அமைத்துத் தந்தன.

அரசியல் நையாண்டி கலந்த இவரது தொடர்களுக்கு உக்ரைனுக்கு வெளியேயும் ரசிகர்கள் திரண்டனர். ரஷ்யாவுக்கு எதிரான வசனங்கள் நீக்கப்பட்டு ரஷ்யாவிலும் அவை ஒளிபரப்பாகின. உக்ரேனிய மொழிக்கு முக்கியத்துவம் தரும் உக்ரைன் தேசியவாதிகளுக்கு மத்தியில், ரஷ்ய மொழி பேசிய ஸெலன்ஸ்கி மீது ரஷ்யர்களுக்கும் தனி அபிமானம் உண்டு. அதனால்தான் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த முதல்நாளில் ஸெலன்ஸ்கி வெளியிட்ட முதல் வீடியோ, ரஷ்ய மக்களுக்கானதாக அமைந்தது.

ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய அந்த வீடியோ, ரஷ்யாவுக்கு அப்பாலும் ஸெலன்ஸ்கிக்கான ஆதரவை அதிகரித்தன. இதற்கு எதிர்ப்பாட்டாக, பிறப்புறுப்பால் பியானோ வாசித்து ரசிகர்களை சிரிக்கவைக்கும் ஸெலென்ஸ்கியின் பழைய வீடியோவை ரஷ்யா வலிந்து பரப்பியது. நகைச்சுவை நோக்கிலான அந்த வீடியோவையும் மக்கள் ரசித்தார்களே அன்றி, ரஷ்ய உளவாளிகள் எதிர்பார்த்ததுபோல ஸெலன்ஸ்கியின் இமேஜ் அப்படியொன்றும் டேமேஜ் ஆகவில்லை.

உக்ரைன் குடிமக்களுடன் அதிபரின் செல்ஃபி

ஐரோப்பா - ரஷ்யா இடையே..

’உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருக்கும் கிழக்கு உக்ரைனில் அமைதியை கொண்டு வருவேன்; ரஷ்யாவுடனான மோதல் போக்கினை முடிவுக்குக் கொண்டு வருவேன்’ என்ற தனது 2 பிரதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில், நடைமுறை சிக்கல்களால் பலமுறை இடறியிருக்கிறார் ஸெலன்ஸ்கி. உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் கைப்பாவையாக இருப்பதை மனதார வெறுத்தனர். அவர்களின் உணர்வுகளை அதிபர் ஸெலன்ஸ்கி அப்படியே பிரதிபலித்தார். ரஷ்யாவின் இடையூறின்றி சுதந்திரமாக வாழ உக்ரைனியர்கள் விரும்பினர். அதற்கேற்ப சோவியத் ரஷ்யாக்கு எதிராக உருவான ’நேட்டோ’ கூட்டமைப்பில், முன்னாள் சோவியத் நாடுகள் ஒவ்வொன்றாக சேர்ந்ததன் வரிசையில், உக்ரைனுக்கும் தூண்டில் விடுக்கப்பட்டது.

உக்ரைன் நேட்டோவின் அங்கத்தினராவது தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதால் அதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. ரஷ்யாவை மிரட்ட நேட்டோவில் இணைவதாக பூச்சாண்டி காட்டினாலும், ஸெலன்ஸிக்கு நேட்டோவில் சேர உள்ளூர விருப்பமில்லை. ரஷ்யாவை சீண்ட உக்ரைனை பகடையாக்கும் மேற்கு நாடுகளின் சூழ்ச்சிக்கும் அவர் பலியாக விரும்பவில்லை. இருப்பினும் இருதரப்பு நெருக்கடிகளுக்கு ஏற்ப உரிய முடிவினை அப்போதைய காலச்சூழல் உருவாக்கட்டும் என காத்திருந்தார். அந்த இழுத்தடிப்பு ரஷ்யாவின் பொறுமையை இழக்கச் செய்ததில் தற்போது போராக வெடித்திருக்கிறது.

உக்ரைனில் பரிசோதிக்கப்படும் ரஷ்ய தளவாடங்கள்

தாக்குதல் தொடங்கியதுமே ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுமாறு உக்ரைன் ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்கமாய் விடுத்த செய்திக்கு எவரும் செவிசாய்த்தபாடில்லை. பதுங்கு மாளிகையில் ஒளிந்தபடி உத்தரவுகளை பிறப்பிக்காது, படைக்களத்தில் கவச உடையணிந்து ஸெலன்ஸ்கி வலம் வருவதே உக்ரைன் ராணுவத்தின் தெம்புக்கு இன்னொரு காரணம்.

வேறு வழியின்றி இறுதி தாக்குதலுக்கு நாள் குறித்திருக்கிறார் புதின். உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான தாக்குதலாக அது இருக்கலாம். இந்த 2 வாரங்களில் ரஷ்யாவின் போர் தளவாடங்களின் பரிசோதனை களமாகவே உக்ரைன் இருந்து வந்திருக்கிறது. இந்த பரீட்சார்த்த ஆயுத பிரயோகங்களில் சேகரிக்கப்படும் ஆவணங்கள் ரஷ்யாவின் ஆயுத தளவாடங்களின் விற்பனையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கின்றன. இப்படி ரஷ்யா அறிமுகம் செய்யும் ஆயுதங்களின் வரிசையில், உக்ரைனை அடிபணியச் செய்யும் அணு ஆயுதமற்ற தீவிரத் தாக்குதலை, உலக நாடுகள் கவலையுடன் எதிர்நோக்கியுள்ளன. உயிர்பலிகள் அதிகமாக வாய்ப்புள்ள அந்த இறுதிக்கட்ட தாக்குதலை, உக்ரைன் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது பெரும் கேள்வியாக எழுந்திருக்கிறது.

போர்க்களத்தில் ஸெலன்ஸ்கி

சமரசங்களும் ஸெலன்ஸ்கியும்..

இவற்றுக்கு விடையளிக்கும் வகையில் சமரச நோக்கில் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் ஸெலன்ஸ்கி. நேட்டோவில் சேரப் போவதில்லை என உறுதி தெரிவித்திருப்பதோடு, கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களின் சுதந்திர பிரகடனம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் இறுதி முடிவை எட்டவும் இறங்கி வந்துள்ளார்.

ஆனால், ஸெலன்ஸ்கி அப்படியெல்லாம் சமரசத்துக்கு ஆளாகிறவர் இல்லை என்பதையும் அவரது முன்கதை சொல்கிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ஆட்சிக் காலத்தின் இறுதியில், உக்ரைனுக்கான 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ தளவாட உதவி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. கைம்மாறாக ஸெலன்ஸ்கியிடம் ஓர் உதவியை எதிர்பார்த்தார் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து நிற்கப்போகும் ஜோ பைடன் தொடர்பான முக்கிய விவரங்களை உக்ரைனிலிருந்து அளிக்குமாறு பேரம் பேசினார் ட்ரம்ப். ஜோ பைடனின் மகன் ஹன்டர் தொடர்புடைய எரிவாயு நிறுவனம் தொடர்பான ரகசிய தகவல்கள் அவை. அவற்றை ட்ரம்புக்கு அளித்தால், உக்ரைனுக்கான அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதோடு, ட்ரம்பின் அணுகுமுறையை அடியோடு வெறுத்த ஸெலன்ஸ்கி, அமைதி காத்தார்.

அமெரிக்க அதிபரின் நாசூக்கான மிரட்டலுக்கு அடிபணியாதவர், தற்போது ரஷ்யாவுடன் சமரசத்துக்கு தயாராவதை ஸெலன்ஸ்கியின் ராஜதந்திரம் என்கிறார்கள். அரசியல் அனுபவமற்றவர் என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளான ஸெலன்ஸ்கியின் இந்த நகர்வுகள், போருக்கு பிந்தைய உக்ரைன் அரசியலில் அவருக்கு சாதகமாக அமையலாம். வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பான பண்டோரா ஆவணங்களின் பட்டியலில் ஸெலன்ஸ்கியின் பெயர் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் வலுவிழந்து போகலாம்.

மாறாக, போரின் முடிவு என்பது அதிபர் ஸெலன்ஸ்கியின் முடிவாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஸெலன்ஸ்கி உக்ரைனுக்கு அப்பால் உலக வரலாற்றிலும் நீங்காத இடம்பிடிப்பார்.

x