உக்ரைனுக்கு அல்ல, ரஷ்யாவுக்குத்தான் அதிக பாதிப்பு: போர் நிலவரம் குறித்து ஓர் அலசல்


ஒரே வாரத்தில் உக்ரைன் காணாமல் போய்விடும் - ரஷ்யா வாகை சூடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வியப்பு, ரஷ்யாவும் வெல்லவில்லை, உக்ரைனும் தோற்கவில்லை! உக்ரைன் ராணுவ பலம் உள்ளதாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படியில்லை. அப்படியென்றால் ரஷ்ய ராணுவம்தான் வலிமை குறைந்ததாக இருக்க வேண்டும். ஆம், அது உண்மைதான் என்று மேற்கத்திய நாடுகளின் ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படைகளுக்கு தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் டேவிட் பெட்ராய்ஸ் தெரிவிக்கும் கருத்துகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டை மூன்று பக்கங்களில் சூழ்ந்துவிட்டதை அடுத்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு உதவிக்கு வரும் என்று உக்ரைன் எதிர்பார்த்தது. அப்படி வராத நிலையில், உதவிக்கு வருமாறு நேரடியாகவும் அழைப்பு விடுத்தது. மேற்கத்திய நாடுகள் வேடிக்கைதான் பார்த்தன. முதல் ஒரு வாரத்தில் ரஷ்ய விமானப்படை விமானங்கள் குண்டுவீசியும் ஏவுகணைகள் மூலம் தாக்கியும் உக்ரைன் நகரங்களைச் சேதப்படுத்தத் தொடங்கின. உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விமான தளங்கள், துறைமுகங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதசாலைகள், ஆயுத – தளவாட உற்பத்தி ஆலைகள், அணு நிலையங்கள், பெட்ரோல் – டீசல் சேமிப்பு கிடங்குகள், கவச வாகனங்கள், டாங்குகள் இருந்த பாசறை, தரையில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்கள் என்று அனைத்தையும் திட்டமிட்டு தாக்கி அழித்தன. அத்துடன் தலைநகரம் கீவ் உள்ளிட்ட பெரு நகரங்களில் மருத்துவமனைகள், குடியிருப்புகள், மின்னுற்பத்தி நிலையங்கள் உள்பட அனைத்தையும் ஏவுகணைகளால் தாக்கி சேதப்படுத்தத் தொடங்கியது ரஷ்யா.

அதைவிட, அச்சமூட்டும் வகையில் 40 மைல் தொலைவுக்கு ரஷ்ய எல்லையிலிருந்து கீவ் நகரம் நோக்கி மிகப் பெரிய ராணுவ வாகனத் தொடரை அனுப்பியது. அதில் கவச வாகனங்கள், டேங்குகள், பீரங்கி வண்டிகள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை ஏவுவதற்கான மேடைகள் என்று ஏராளமாக இருந்தன. ராணுவ வாகனங்களுக்கான எரிபொருட்கள், குடிநீர், ஆயுதங்கள், தளவாடங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், மருத்துவக் கருவிகள், மருந்து – மாத்திரைகள், உணவு, மருத்துவர்கள் – செவிலியர்கள் என்று அனைத்தையும் வாகனங்களில் ஏற்றி மிகப் பெரிய அணி வகுப்பைச் செய்திருந்தது. உக்ரைனிடம் போர் விமானங்கள், அதிலும் குண்டுவீச்சு விமானங்கள் குறைவு என்பதால் அந்த வாகனத் தொடரை எதிர்கொண்டு போய் அழிக்கும் வேலையில் ஈடுபடவில்லை. அதே சமயம் அந்த வாகனத் தொடரை மிக அருகிலிருந்து உளவு பார்த்து, அவற்றால் அதிக பாதிப்பு இருக்காது என்பது தெரிந்ததால், தாக்குவதற்கு வசதியான இடத்துக்கு அவை வரும் வரை காத்திருந்து பிறகு அவற்றை அழிப்பது என்ற முடிவை உக்ரைன் ராணுவம் எடுத்தது.

க்ரைமியா, ஜார்ஜியா, செசன்யா போர்களில் வென்று அந்தப் பகுதிகளை ரஷ்ய ராணுவம் வெற்றி கொண்டதால் ரஷ்யாவின் ராணுவத்தை எவரும் குறைத்து எடைபோடவில்லை. இரண்டாவது உலகப் போரில் ஆனானப்பட்ட ஜெர்மனியையே இறுதியாகத் தோற்கடித்து உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் ஜோசப் ஸ்டாலினுக்கும் ரஷ்யப் படைகளுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. எனவே ரஷ்ய ராணுவத்துடன் வம்புக்குப் போக அஞ்சி, நேட்டோவில் உறுப்பினராக இல்லை என்பதால் உங்கள் (உக்ரைன்) சார்பாக நாங்கள் சண்டை போட முடியாது என்று கடைசி நேரத்தில் கையை விரித்துவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எங்கள் நாட்டு வான்வெளி மீது ரஷ்ய விமானங்கள் பறக்கக் கூடாது என்றாவது தடை விதியுங்கள் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி மன்றாடியபோது, அப்படிச் செய்தால் நாங்கள் போரில் இறங்கிவிட்டதாக அர்த்தம், மூன்றாவது உலகப் போருக்கு நாங்கள் காரணாக இருக்க விரும்பவில்லை என்று கூறி அதையும் மறுத்துவிட்டார் பைடன். எங்கள் கைவசம் இருக்கும் மிக் ரக போர் விமானங்களை உக்ரைனுக்குத் தருகிறோம் என்று போலந்து முன்வந்தபோது, அதுவுமே போரில் இறங்குவதற்குச் சமம்தான், சும்மா இருங்கள் – ஆயுதங்களை மட்டும் கொடுப்போம் என்று தடுத்துவிட்டார் பைடன்.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

ரஷ்ய ராணுவ பலவீனங்கள்

தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பேசியவர் ஸெலன்ஸ்கி – அதில் கிடைத்த அறிமுகத்தால் அதிபரானாவர் என்பதால் அரசின் தலைவராக தீவிரமாகச் செயல்பட மாட்டார், அஞ்சி ஓடிவிடுவார் என்று ரஷ்யத் தலைவர்கள் கருதினர். அது தவறு என்று பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பலி கொடுக்கத் தயார், ரஷ்யாவுக்கு அடிமையாக இருக்க மாட்டோம், போர்க்களத்தில் குண்டுகளை மார்பில் வாங்கித்தான் இறப்போம், முதுகில் பெற்று அல்ல என்று அறிவித்துவிட்டார். ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு பயிற்சி பெற்ற முழு நேர ராணுவ வீரர்கள். வேறு நாடுகளுடனான போர்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்று உக்ரைன் திரும்பிய ஏராளமானோர் தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்காக தாங்களாகவே முன்வந்து படைகளில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களும் மாணவர்களும் படிப்பு, வேலை ஆகியவற்றை விட்டுவிட்டு உக்ரைனுக்காக போர்புரிய வந்துவிட்டனர். எல்லா நகரங்களிலும் போர் செய்யக்கூடிய ஆற்றலும் வயதும் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு உக்ரைன் ராணுவ அதிகாரிகளின் கட்டளைப்படி நடக்கசத் திரண்டுவிட்டனர். ராணுவத்தின் தற்காப்பு அரண்களுக்கு உதவியாக மக்களும் நகரங்களில் காவல் பணி செய்கின்றனர். காடுகளில் ஊடுருவியுள்ளனர். இதனால் ரஷ்யர்கள் திணறும் அளவுக்கு எதிர்ப்பு பலமாக இருக்கிறது.

பிப்ரவரி மாதக் கடைசியில் அதிக பனிப்பொழிவு இல்லாவிட்டாலும் இரவில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருக்கிறது. இதை ஊரோடு இருக்கும் உக்ரைனியர்களால் தாங்கிக் கொள்ள முடியும். டாங்கிகள், கவச வாகனங்கள், லாரிகள் போன்ற உலோக வாகனங்களில் வந்த ரஷ்யர்களால் தாங்க முடியவில்லை. உறைபனிக் குளிரால் கை – கால்கள் வெடவெடத்து வெளியே வரவே தயங்கிக் கொண்டு வாகனங்களில் இருக்கின்றனர். ரஷ்ய ராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு வரை, கட்டாய ராணுவ சேவைக்காக வந்து சேர்ந்தவர்கள். மாணவர்கள், தொழிலாளர்கள் போன்ற இவர்கள்தான் வாகனங்களை ஒட்டுவது, தகவல் தொடர்புகளைப் பராமரிப்பது, ஆயுதங்களைத் தயார் நிலையில் வைப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். போர்க்கள அனுபவம் இல்லாததால் வேலையில் வேகமும் நேர்த்தியும் இல்லை. வாகனங்கள் மைல் கணக்கில் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக வரக்கூடாது என்பது ராணுவ வியூக வகுப்பின் பாலபாடம். ஒரு சில போர் விமானங்கள் துணிச்சலாக செயல்பட்டு இந்த வாகனத் தொடர்கள் மீது குண்டுகளை வீசிக் கொண்டே போனால் ஒன்று வெடித்துச் சிதறி தீப்பிடித்தால் அது மேலும் சில வாகனங்களைச் சேதப்படுத்திவிடும். எந்த வாகனத்தாலும் விலகி ஓடவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது. தார்ச் சாலையில் மட்டும்தான் பனிப்பொழிவு தெரிகிறது. அதற்குப் பக்கவாட்டுகளில் உள்ள மண் பகுதியில் பனி விழுந்து சேறாகக் குழம்பியிருக்கிறது. இதில் இறங்கும் ராணுவ வாகனங்கள் அதிக எடை காரணமாக மேலும் மேலும் ஆழ்ந்து சேறில் சிக்குமே தவிர மீளாது. அது மட்டுமின்றி வாகனங்களைப் பழுதுபார்க்கவோ, முந்திச் செல்லவோ மண்ணில் இறங்கினால் அவை சேற்றில் சிக்கிமேற்கொண்டு நகர முடியாமல் நிலைகுத்திவிடும். பிறகு அவற்றை உக்ரைனியர்களால் அழிப்பதும் செயலிழக்க வைப்பதும் மிக எளிது. இந்தக் குறையை சில நாள்களுக்குப் பிறகு உணர்ந்த ராணுவத் தலைமை வாகன சங்கிலித் தொடரை அறுத்து, ஆங்காங்க மரங்களுக்கு அடியில் கொண்டுபோய் நிறுத்துமாறு உத்தரவிட்டது. வாகனங்களை ஓட்டிய அனுபவமற்ற இளைஞர்கள் என்ஜின்கள் உறைபனிக் காரணமாக சூடேறி செயலாற்றவில்லை என்றதும் அங்கங்கேயே விட்டுவிட்டு தலைமைக்குத் தெரிவிக்கப் போய்விட்டனர். எல்லாவற்றையும் விட முக்கியம் தொடக்க நாள்களில் ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைனியர்களைப் பகைவர்களாகக் கருதி அழிக்க மனமே இல்லை. தயங்கினர். கீவ் நகருக்கு உள்ளே வந்த ரஷ்யர்களை ஒரு பெண் மிகவும் கடுமையான சொற்களால் வசைபாடிய காணொலிக் காட்சி கூட வைரலானது.

செசன்யர்கள், ஜார்ஜியர்கள், கிரைமியர்களை ரஷ்ய ராணுவம் வென்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் போர்த்திறம் மிக்கவர்கள அல்ல. அத்துடன் ஆப்கானிஸ்தானில் நவீன ஆயுதங்கள் ஏதுமில்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சண்டையிட்ட தாலிபான்களையே ரஷ்யர்களால் அடக்க முடியாமல்தான் அந்த நாட்டைவிட்டு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறினர். ரஷ்யர்களின் பீரங்கிகளும் டாங்கிகளும் ஏவுகணைகளும் சேதம் விளைவித்தாலும் உக்ரைனிய மக்கள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு நிலவறைகளுக்குள் பதுங்கி விட்டதால் உயிர்ச் சேதம் அதிகமில்லாமல் தப்பிக்கின்றனர்.

இருபது ஆண்டுகளில் நேட்டோ கூட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் சந்தித்த மனித இழப்பை ரஷ்யப் படைகள் உக்ரைனில் முதல் வாரத்திலேயே சந்தித்துவிட்டது. அது மட்டுமல்ல ஏராளமான ரஷ்ய இளம் வீரர்கள் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர். இது மற்றவர்களின் உள்ள உறுதியைக் குலைத்துவிட்டது. மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் ரஷ்யர்கள் கை தேர்ந்தவர்களாக இல்லை. ரஷ்ய ராணுவத்துக்குள்ளேயே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் போதவில்லை. விமானப் படையும் தரைப்படையும் ஒருங்கிணைந்து சண்டையிடவில்லை. இதனால்தான் சீனாவிடம் ஆயுத உதவியைக் கேட்டது ரஷ்யா. சீனா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. தார்மிக ஆதரவுதான் தர முடியும், உக்ரைனுக்கு எதிரான சண்டையில் எங்களிடம் உதவி கேட்கலாமா என்று நாசூக்காக திருப்பிவிட்டது. ரஷ்யா உதவி கேட்கவில்லை என்று சீனாவும், சீனாவிடம் உதவி கேட்கவில்லை என்று ரஷ்யாவும் பிறகு மறுத்தும் விட்டன. ரஷ்யாவைப்போலவே உக்ரைனும் சீனத்துக்கு வியாபாரக் கூட்டாளி. உக்ரைனிடமிருந்துதான் ராணுவ டாங்குகளுக்கான சக்திவாய்ந்த என்ஜின்களை சீனம் வாங்குகிறது.

ரஷ்ய ராணுவ டாங்குகளைத் தாக்கி அழிக்கும் ஜாவலின் ரக ஏவுகணைகளை அமெரிக்கா நான்கு நாள்களுக்குள் 17,000 எண்ணிக்கையில் தந்துள்ளது. உக்ரைனின் தபால் துறையில் பணியாற்றும் ஊழியர், இந்தப் போரில் தானாகவே வந்து சேர்ந்துகொண்டு தோளில் வைத்து சுடும் ஏவுகணையைக் கொண்டு ரஷ்யப் போர் விமானத்தை வீழ்த்தி போர் நாயகனாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். உக்ரைனின் ராணுவ பலத்தைப் பட்டியலிட்ட ஒரு குறும்புக்காரர், தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றுடன் தபால் – தந்தித்துறை படையையும் சேர்த்துவிட்டார். போருக்கு நடுவிலும் உக்ரைனியர்கள் கைப்பேசிகளில் இப்படி குறும்பான மீம்ஸ்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே சண்டை போடுகின்றனர். ரஷ்யத் தலைமையோ, ரஷ்ய வீரர்களுக்கு உண்மை நிலவரம் தெரியக் கூடாது என்று கடுமையான தணிக்கையை அமல்செய்வதுடன் இணையதளங்களையும் கிட்டத்தட்ட முடக்கவிட்டது.

சொந்த நாட்டுக்குள்ளேயே இருந்து போர்செய்யும் உக்ரைனியர்களுக்கு நகரமும் சுற்றியுள்ள பிரதேசங்களும் அத்துப்படி. எனவே எந்த இடம் தங்களுக்கு சாதகமானது என்று தெரிந்துகொண்டு அங்கே முகாமிட்டு எதிரிகளுக்காக காத்திருந்து அழிக்கிறார்கள். வயது வந்த சிறுவர்களும் சிறுமிகளும் காடுகளிலும் மலைகளிலும் நதி தீரங்களிலும் மறைந்திருந்து ரஷ்ய நடமாட்டம் குறித்து அருகில் உள்ள ராணுவ முகாம்களுக்குத் தகவல்கள் அனுப்புகின்றனர். மின்சார சப்ளை இல்லை, தகவல் தொடர்பு கோபுரங்கள் விழுந்துவிட்டன, அப்புறமும் இந்த மனித சங்கிலித் தகவல் தொடர்புகளால் உக்ரைன் ராணுவம் உயிர்ப்போடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியம், உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனை ஆதரிக்கின்றன, அதன் இழப்புகள் குறித்து அனுதாபப்படுகின்றன. விஷயம் தெரிந்த ரஷ்யர்களும் உக்ரைனுடன் போர் வேண்டாம் என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ரஷ்ய ரூபிளின் மதிப்பு வேகமாகச் சரிந்ததுடன் அதன் தொழில், வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கி வருகின்றன. ரஷ்யாவை ஆதரிக்கும் முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகளும் துணை விளைவாக பொருளாதார இழப்பைச் சந்தித்துவருகின்றன. போர் தொடர்ந்தாலும் முடிந்தாலும் இதிலிருந்து மீள ரஷ்யாவுக்கும் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் உறுப்பினர்களான இதர நாடுகளுக்கும் நீண்ட காலம் பிடிக்கும். மக்கள் வேலையிழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றுடன் கடுமையான வறுமையிலும் சிக்கிவிடுவார்கள் என்பது புரிகிறது.

x