போருக்கு எதிராகக் குரல் கொடுத்த ரஷ்ய ஊடகருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்!


ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியான ‘சேனல் ஒன்’ சேனலில், மார்ச் 14-ம் தேதி செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, செய்தி வாசிப்பாளரின் பின்னே நின்றுகொண்டு அதன் ஆசிரியர்களில் ஒருவரான மரினா ஒவ்சையான்னிகோவா, “போரை நிறுத்துங்கள். போர் வேண்டாம்” என்று கூச்சலிட்டார். நேரலையில் ஒளிபரப்பான இந்தச் சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

அவர் வைத்திருந்த பதாகையில், ‘இந்தப் பிரச்சாரத்தை நம்பாதீர்கள். அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்கள் இந்தப் போரை எதிர்க்கிறார்கள்’ என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி போருக்கு எதிராகப் பேசிய அவரை தண்டித்துவிட வேண்டாம் என ரஷ்யாவிடம் ஐநா கோரியிருந்தது. அவர் எங்கு அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், மரினாவுக்கு 30,000 ரூபிள்கள் (இந்திய மதிப்பில் 21,000 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ தெரிவித்திருக்கிறது.

‘சேனல் ஒன்’ தொலைக்காட்சி நேரலையில் குறுக்கிட்டு போருக்கு எதிராக முழக்கம் எழுப்புவதற்கு முன்பே, இன்னொரு வடிவிலும் தனது எதிர்ப்பை அவர் பதிவுசெய்திருந்தார். அந்த சேனலில் வேலை செய்வது அவமானகரமானது என அவர் பேசிய காணொலியும் ஓவிடி-இன்ஃபோ எனும் மனித உரிமைக் குழு மூலம் வெளியானது. அதில் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். “மனிதகுலத்துக்கு எதிரான இந்த அரசை நாம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறோம். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டது. அவமானத்துக்குரிய இந்தச் சகோதர யுத்தத்தால் அடுத்த 10 தலைமுறைகள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முடியாது” என்றும் கூறியிருந்தார். தனது தாய் ஒரு ரஷ்யர் என்றும், தந்தை உக்ரைனியர் என்றும் அந்தக் காணொலியில் அவர் பதிவுசெய்திருந்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்த இரு தருணங்களிலும் உக்ரைன் தேசியக் கொடியின் வண்ணங்கள் கொண்ட நெக்லஸை மரினா அணிந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை மாஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் ஆன்டன் காஷின்க்ஸ்கியுடன் ஆஜரான அவர், அதே நெக்லஸை அணிந்திருந்ததார்.

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் பலரும் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஊடகங்கள் மீது ரஷ்ய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. போர் குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தையும் கொண்டுவந்திருக்கிறது. மரினாவுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x