அது ஒரு விபத்து, வேறொன்றுமில்லை!


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு எனும் இடத்தில் இந்தியாவின் ஏவுகணை விழுந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் அறிக்கை

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 11), இந்தியப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமான பராமரிப்புப் பணியின்போது நடந்த தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகவே இது நிகழ்ந்தது என்றும், இது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதால், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழல் உருவாகும் எனக் கருதப்பட்ட நிலையில், அவ்வாறு ஏதும் நிகழவில்லை. தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என இந்தியா அறிவித்திருந்தாலும், அது போதாது என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் இது தொடர்பாகக் கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது.

அமெரிக்கா கருத்து

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “இதுதொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் வேண்டும் என்றால் இந்தியப் பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொள்ளுங்கள். என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிக்கையில் விளக்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தாண்டி நாங்கள் கருத்து சொல்ல எதுவும் இல்லை” என்றார்.

மேலும், “இந்தியா ஏற்கெனவே தெரிவித்திருந்ததைப் போல, இது எதிர்பாராத விபத்து என்பதைத் தாண்டி வேறு எந்த அறிகுறியும் எங்களுக்குத் தென்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தானைவிடவும் இந்தியாவுடன் அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டுகிறது. இந்தியா அணு ஆயுதம் கொண்டிருக்கிறது என்றாலும், பொறுப்புடன் நடந்துகொள்ளும் நாடு எனச் சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான சூழல் நிலவ இதும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

x