வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் இந்தியா!


"பிளாஸ்டிக் மாசில்லா பிரதேசம் இன்று பூமியில் இல்லை. ஆழ்கடல் முதல் எவரெஸ்ட் சிகரம்வரை பிளாஸ்டிக் கழிவு இவ்வுலகை ஆக்கிரமித்து விட்டது. இதிலிருந்து பூமிக்கு விடிவு பிறக்க பன்முனை தீர்வுகள் அவசியம். பிளாஸ்டிக் மாசு தடுப்புக்கு சட்டபூர்வமாக வகுக்கப்பட்ட உலகளாவிய ஒப்பந்தம் வரவேற்கத்தக்க முதல் படியாக இருக்கும்” அண்மையில் ஐ.நா சபையின் துணை பொதுச்செயலாளர் அமினா முகமது பேசிய கவலை தோய்ந்த வார்த்தைகள் இவை.

193 நாடுகளின் ஐ.நா பிரதிநிதிகள் பங்கேற்ற ’ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை 5.2’ கென்யா நாட்டின் நைரோபி நகரில் மார்ச் 2 -ம் தேதி நடைபெற்றது. 2024-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை உலகிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான சர்வதேச உடன்படிக்கை அப்போது கையெழுத்தானது. அதையொட்டி அமினா பேசிய பேச்சின் சாரம்தான் மேற்கூறியவை.

வெறும் மஞ்சப்பை போதாது!

சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடு விளைவிப்பது, கால்நடைகள் உட்கொள்ளும் உணவில் கலந்து அவற்றின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைப்பது, கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழப்பதற்குக் காரணமாவது, உணவுச் சங்கிலியைத் துண்டிப்பது என பல்வேறு பிரச்சினைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்பட்டு வருவதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகளால் விளையும் இத்தகைய ஆபத்துகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொருத்தமட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க அவ்வப்போது சிறிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் துணிப்பைகளைப் பரிந்துரைப்பதோடு நின்று விடுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த பூமிக்கே அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் பிரச்சினைக்கு இத்தகைய எளிய தீர்வு கடலில் கரைத்த பெருங்காயத்துக்குச் சமம்.

கடலென்று சொல்லிவிட்ட பிறகு, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பையிலிருந்தே தொடங்குவோம். உலகெங்கிலும் உள்ள சமுத்திரங்களின் மேற்பரப்பில் மட்டுமே 51 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாகச் சொல்கிறது கள ஆய்வு. இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகளின் பெரும்பகுதி ஆறுகளின் வழியாகத்தான் கடலை சென்றடைகிறது. ஆனால், நீர்நிலைகளுக்கும் பிளாஸ்டிக்கிற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை. நிலத்தில் வாழும் மனிதர்கள் பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடற்கரைகள் உள்ளிட்ட நீர்ப்பரப்புகளில் கொட்டப்படுகின்றன. அவைதான் இறுதியாக சமுத்திரத்தில் சங்கமிக்கின்றன.

இதுபோன்று கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பைகள், புட்டிகளுக்கு இடையில் மீன்கள், கடல் ஆமைகளின் தலை, துடுப்பு, செதில்கள் உள்ளிட்ட பாகங்கள் அகப்பட்டு அவை காயப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடல்வாழ் தாவரங்களோடு சேர்த்து பிளாஸ்டிக் துகள்களையும் விழுங்கும் மீன்களை நாம் உணவாக உட்கொள்வது அடுத்த பிரச்சினை. ஆனால், இதன் விளைவு என்னவென்பது இதுவரை முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள நீர்நிலைகளின் மீதும், கடல்களின் மீதும் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 2030-ல் இரட்டிப்பாகும் என எச்சரிக்கப்படுகிறது.

அவர்களுக்கு நாம் குப்பைத்தொட்டி!

பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளின் மீது மட்டும் தாக்கம் செலுத்துவதில்லை. எவரெஸ்ட் சிகரத்திலும் ஆர்ட்டிக் துருவத்திலும்கூட பிளாஸ்டிக் குப்பைகள் காணப்படுகிறது. புவி வெப்பமடைதலுக்குக்கூட பிளாஸ்டிக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பசுமைக்குடில் வாயுக்களை உற்பத்தி செய்வதில் பிளாஸ்டிக் கழிவுகள் ஐந்தாம் இடத்தை வகிக்கின்றன. அதேநேரத்தில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பிற நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளையே உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வளர்ந்த நாடுகளின் நுகர்வு நம்மைவிடவும் பல மடங்கு அதிகமாக இருப்பதால், அங்கு குப்பைகளும் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக தெற்காசிய நாடுகளிலும் சர்வதேச சந்தையின் தாக்கத்தால் நுகர்வு கலாச்சாரம் பன்மடங்கு பெருகியுள்ளது. அதன் விளைவாக பிளாஸ்டிக் குப்பை உற்பத்தியும் 2050-ம் ஆண்டு வாக்கில் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்படுகிறது.

இவற்றைவிட கொடுமை என்னவென்றால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் அப்புறப்படுத்தவும் தெற்காசிய நாடுகளை குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் குப்பை இறக்குமதி தெற்காசிய நாடுகளின் சாபமாகவே நீடித்து வருகிறது. பெரும்பணக்கார நாடுகள் வெளியேற்றும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தங்களது நாட்டுக்குள் இனியும் அனுமதிக்க முடியாது என்று 2018-ல் சீனா முடிவெடுத்தது.

இதையடுத்து, அதுவரையில் சீனா தலையில் கொட்டப்பட்டு வந்த பிளாஸ்டிக் குப்பைகள் தாய்லாந்துக்கு திருப்பப்பட்டன. இதனால் 2018-2020 இடையிலான காலகட்டத்தில் தாய்லாந்தின் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி 1000 சதவீதம் அதிகரித்தது. இதற்கிடையில் இந்தியாவும், வங்கதேசமும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்குத் தடைவிதித்தன. ஆனாலும், இன்றுவரை சட்டத்துக்குப் புறம்பாக பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவுக்குள் இறக்குமதியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

’யூஸ் அண்டு த்ரோ!’ வேண்டாமே!

இவ்வளவு ஆபத்தான போக்கை ஐ.நா சபை இப்போதாவது உணர்ந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதன்படி பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான உலகளாவிய சட்டகத்தை வகுக்கும்படி ஐ.நா உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்களின் அடிப்படையில் பிளாஸ்டிக் மாசில்லா உலகை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தில் தென் அமெரிக்க நாடான பெரு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ரவாண்டா, ஜப்பான் ஆகியவை பரிந்துரைத்த சட்டதிட்டங்கள் முக்கிய இடம் வகித்ததாக அறியப்படுகிறது. இந்தியா முன்வைத்த, ‘ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உண்டாக்கும் மாசுபாட்டுக்கு தீர்வு காண்பதற்கான சட்டகம்’ உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ’நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் வழியாக அந்தந்த நாடுகள் எந்த அளவுக்குக் கட்டாயமாக பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்து, மறுசுழற்சி செய்து, நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான சட்டரீதியான நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும்.

2015-ன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு அடுத்தபடியாக இந்த தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது வார்த்தைகள் மெய்ப்பட, ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்டும் லட்சக் கணக்கான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று கண்டறியப்பட வேண்டும். குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி நமது தாரக மந்திரமாதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக்கப்படுவதிலிருந்து நமது இந்தியாவும் காப்பாற்றப்பட வேண்டும்.

x