உக்ரைன் போரின் பின்விளைவுகள்: ஓர் ஆழமான, விரிவான அலசல்!


ரஷ்யா நிகழ்த்தி வரும் கடுமையான தாக்குதலால் உருக்குலைந்து வருகிறது உக்ரைன். ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளுடன் உக்ரைனின் ராணுவ மையங்களும் மக்கள் குடியிருப்புகளும் மருத்துவமனை – பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொதுப் பயன்பாடுகளும் பாலங்களும் திட்டமிட்டே தகர்க்கப்படுகின்றன. நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம், சமரசம் பேசத் தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அறிவித்த பிறகும்கூட ரஷ்யா தாக்குதலைக் குறைக்கவில்லை. மாறாக உக்ரைனின் பிற நகரங்களைக் குறிவைத்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. போர் ஓய்ந்தாலும் உக்ரைன் மீள்வதற்கு மேலும் பல பத்தாண்டுகள் பிடிக்கும். அதுதான் ரஷ்யாவின் நோக்கமும். நேட்டோவில் சேர விரும்பும் முந்தைய (பிற) சோவியத் ஒன்றிய நாடுகளை எச்சரிக்கவும், மேற்கு நாடுகளுக்குத் தன்னுடைய மன உறுதியைக் காட்டவும் புதின் இப்படி விடாமல் தாக்கிவருகிறார்.

ரஷ்ய மக்களுக்கு போர் பற்றிய உண்மைத் தகவல்கள் தெரியாமல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. சமூக ஊடகங்களும் கடுமையான தணிக்கைக்கு உள்ளாகின்றன. போர் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்த 6,000-க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் மேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பது தேசத்துரோகமாகக் கருதப்படும் என்று சிறப்பு சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுவிட்டது.

மாஸ்கோவில் இயல்பு நிலை!

ரஷ்யத் தலைநகரமான மாஸ்கோவைப் பார்க்கும் எவரும் இந்த நாடா போர் நடத்துகிறது என்று வியக்கும் வண்ணம் அங்கு இயல்பு வாழ்க்கை தொடர்கிறது. கடைகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லா பொருட்களும் அலமாரிகளில் நிறைந்து காணப்படுகின்றன. ஹோட்டல்களிலும் பார்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் அலுவலகம் செல்கிறார்கள். மெட்ரோ ரயில்களில் கூட்டம் வழக்கம்போல எண்ணிக்கை குறையாமல் பயணிக்கிறது. வாகனங்களால் நகரின் மையப் பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேசமயம், ரஷ்யாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து நின்றுவிட்டது. புறப்படும் விமானங்கள் ரஷ்யப் போர் விமானங்களாகவே இருக்கின்றன. ‘இசட்’ என்ற ஆங்கில எழுத்தை – ஆதாவது போருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் – ரஷ்யப் படைகளுக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்பதை இசட் குறியீடாக பெரிய வணிக நிறுவனங்களிலும் கட்டிடங்களிலும் பார்க்க முடிகிறது. வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகள் ரத்து பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிறது. சர்வதேச கால்பந்து போட்டிகள் உள்ளிட்டவற்றில் ரஷ்ய அணிக்கு அனுமதியில்லை என்ற விவரம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களும் அணி மேலாளர்களும் அவரவர் நாடுகளுக்குப் போய்விட்டனர் அல்லது போகத் தயாராகிவிட்டனர். ரஷ்ய வீதிகளில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் அறவே இல்லை. நகர வீதிகளிலும் சதுக்கங்களிலும் ரஷ்ய உளவுப்பிரிவுப் போலீஸாரின் நடமாட்டமும் கண்காணிப்பும் அதிகரித்துவிட்டது. மக்களால் அவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது.

ரஷ்ய அரசு ஆதரவுப் பத்திரிகைகளும் அரசுப் பத்திரிகைகளும் ஒரு பக்கம் ரஷ்யாவின் ராஜதந்திர நடவடிக்கைகளைப் புகழ்ந்தும், பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மக்கள் சிரித்த முகத்தோடு எந்தவிதச் சிரம மும் இன்றி எதிர்கொள்ளும் கதைகளையும் பேட்டிகளையும் (கற்பனையாகத்தான்) பிரசுரிக்கின்றன. அது மட்டுமல்லாமல் பிற நாடுகளில் ரஷ்யாவின் எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனைத் தடையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் விலைவாசி உயர்வையும் அதனால் மக்கள் படும் துயரையும் விளக்கமாகப் பிரசுரிக்கின்றன. அதாவது இந்தத் தடைகளால் ரஷ்யர்களுக்குள்ள சிரமங்களைவிட, உலகம் அதிகத் துயரில் சிக்கிவிட்டது என்றே சித்தரிக்கின்றன. புதின் சர்வாதிகாரி போல ஆட்சி செய்கிறார் என்று அவரை எதிர்க்கும் நவால்னி போன்றவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்கள். உக்ரைன் மீதான போர் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் முழு சர்வாதிகாரியாகவே மாறிவிட்டார் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்ய கோடீஸ்வரர் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் எடுத்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்குக் கச்சா எண்ணெயையும் இயற்கை எரிவாயுவையும் விற்கப் போவதில்லை என்று அறிவித்த புதின், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்படுவதை நிறுத்திவிட்டால் அவற்றை நாட்டுடைமையாக்கி, அவற்றின் சொத்துகளைக் கைப்பற்றி உள்நாட்டு நிர்வாகிகள் மூலம் நிர்வகிப்போம் என்று அறிவித்திருக்கிறார். “கடந்த முப்பதாண்டுகளாகத்தான் பல்வேறு தொழில்வள நாடுகள் ரஷ்யாவுடன் தொழில் – வர்த்தக உறவுகளைத் தாராளமாக்கி வளர்த்து வந்துள்ளன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய அரசுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடியாக எதையும் செய்ய முடியாமல்தான் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. உக்ரைன் கோரியபடி உடனடியாக நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டன. ‘மிக்’ ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்க விரும்பிய போலந்தை, அமெரிக்கா தடுத்துவிட்டது. இதிலிருந்து ரஷ்யாவைத் தாக்கும் எண்ணம் அவற்றுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, பன்னாட்டு நிறுவனங்களை ரஷ்யா கைப்பற்றும் முடிவைக் கைவிட வேண்டும்” என்று தொழிலதிபர் விளாதிமீர் பொடானின், அதிபர் புதினுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இவர் நோரில்ஸ்க் நிக்கல் என்ற உலோக தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர். பொருளாதாரத் தடை காரணமாக பங்குச் சந்தையில் இவருடைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையிலும் நல்லதொரு ஆலோசனையை வழங்கியிருக்கிறார். “நாளையே போர் ஓய்ந்து உறவுகள் சீர்பட்டாலும், இனி எதிர்காலத்தில் ரஷ்யாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில் வர்த்தக கூட்டுகளைக் கைவிட்டு விடும். உலக அளவில் ரஷ்யா தனிமைப்படும். நவீனத் தொழில்நுட்பங்கள் கிடைக்காது. நல்ல பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்த முடியாது. அது நல்லதல்ல. இப்போதைக்கு ரஷ்யாவுக்கு நண்பர்களாக இருக்கும் நாடுகளால்கூட நாளை ரஷ்யாவுக்கு உதவ முடியாமல் போய்விடும், எனவே போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தத் தடை அறிவிப்புகளின் உண்மையான நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார். புதினின் அறிவிப்பு வெறும் மிரட்டலோடு நின்றுவிடுமா என்று பார்க்க வேண்டும்.

கோதுமை, உரம் தட்டுப்பாடு ஏற்படும்

உக்ரைனும் ரஷ்யாவும் சேர்ந்துதான் உலக கோதுமை வர்த்தகத்தில் 30 சதவீத அளவுக்குப் பங்களிப்பு செய்கின்றன. போர் காரணமாக உக்ரைனிலிருந்து கோதுமையை இப்போது வெளியே எடுத்துவர வழியில்லை. ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகச் சந்தைக்கு வரும் கோதுமையில் முதல் கட்டமாக 30 சதவீதம் பற்றாக்குறை என்றால் அதற்கேற்ப விலைவாசி உயர்வது தவிர்க்க முடியாதது. அது மட்டுமின்றி கோதுமை சாகுபடியில் உபரியாக உள்ள நாடுகள்கூட இந்தச் சூழலில் கையிருப்பை அதிகமாக வைத்துக்கொள்ளவே இரண்டு காரணங்களுக்காக விரும்பும். கோதுமைக்கு நல்ல விலை கிடைத்தால் பிறகு லாபம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது முதல் காரணம். போர் ஒருவேளை மேலும் நீடித்து வேறு நாடுகளுக்கும் பரவினால் நிச்சயம் உணவுதானியத் தட்டுப்பாடு அதிகமாகும். உள்நாட்டுத் தேவைக்கு அது அவசியம் என்று நினைக்கலாம். உணவு தானியத் தட்டுப்பாட்டால் ஆப்கானிஸ்தான், சூடான், யேமன் போன்ற நாடுகளில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே இந்தப் போர் வழிவகுத்துள்ளது.

ரசாயன உரங்கள் தயாரிப்பிலும் பெரும் பற்றாக்குறை ஏற்படும் என்ற உண்மை மேற்கத்திய நாடுகளுக்கும் இப்போது உறைத்திருக்கிறது. ரஷ்யாவிடம் உள்ள இயற்கை எரிவாயுவைக் கொண்டுதான் ரஷ்யா, உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் உரங்களைத் தயாரிக்கின்றன. வேறு நாட்டிடமிருந்து இயற்கை எரிவாயுவை அவை தருவித்தாலும் அதன் விலை கணிசமாக அதிகரித்துவிடும். எனவே அதையும் சேர்த்து விற்கும்போது உர விலையும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிச்சயம் உயரும்.

பல நாடுகள் உர உற்பத்தியை வழக்கத்தைவிட பாதியாகக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. காரணம் போர்ச்சூழல் காரணமாக உரங்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பிரச்சினைகள் வரும் என்று அவை அஞ்சுகின்றன. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காணும் நாடுகளும் அடுத்து வரும் பருவங்களில் உரத் தட்டுப்பாட்டால் அவதிப்பட நேரும். எனவே போர் நீடித்தால் அல்லது பொருளாதாரத் தடை நீடித்தால் உணவு தானியம், உரம் ஆகியவற்றின் விலை நிச்சயம் உயர்ந்துகொண்டே வரும். இது வறிய நாடுகளை மிகவும் பாதிக்கும். பல நாடுகளின் அன்னியச் செலாவணி கையிருப்பு முழுவதும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயன உரங்களை வாங்குவதிலேயே கரைந்துவிடும்.

இந்தியாவுக்கும் ஆபத்து

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. உரங்களுடைய விலை அதிகரித்து உற்பத்தியும் குறைந்தால், பல நாடுகளில் உரப் பயன்பாடும் குறையும். அதன் தொடர்விளைவாக விளைச்சலும் குறையும். அது மீண்டும் தட்டுப்பாடு – விலை மேலும் அதிகரிப்பு என்ற விஷ வட்டத்துக்கே இட்டுச் செல்லும். ஏதோ ஒரு நாடு, இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கிறது என்ற விவகாரம் அல்ல இது. கோவிட்-19 பெருந்தொற்று எப்படி மறைமுகமான உயிரித் தொழில்நுட்ப ஆயுதப் போர் என்று சந்தேகிக்கப்பட்டதோ அதைப்போல இதுவும் பணக்கார நாடுகள் மேலும் கொழுப்பதற்கான பொருளாதார ராஜதந்திரமோ என்றும் சந்தேகப்படும் அளவுக்குத் தட்டுப்பாடு, விலையுயர்வு என்ற நிலை நோக்கி உலகத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

உக்ரைனில் இப்போது கோதுமை விதைப்புப் பருவம் தொடங்கவிருக்கிறது. இந்தச் சூழலில் போர் தீவிரம் அடைந்திருக்கிறது. நிச்சயம் விவசாயிகளால் வயல்களில் கோதுமையை விதைக்க முடியாது. எனவே அடுத்த பருவத்தில் சாகுபடியே இருக்காது. விவசாயிகள் அனைவரும் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஏர் முனையிலிருந்து போர் முனைக்குப் போய்விட்டார்கள். கருங்கடல் துறைமுக நகரங்களை ரஷ்யா குண்டுவீசி நாசப்படுத்துகிறது. உக்ரைன் போரைக் கைவிட்டு சரண் அடைந்தாலும் கூட அது பொருளாதார ரீதியாக இனி தலையெடுக்கவே கூடாது என்ற முடிவோடு ரஷ்யா அதைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை போர் முழுவதும் உக்ரைன் எல்லைக்குள்ளேயேதான் நடக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. தற்காப்புக்காகவே போரிட்டுக் கொண்டிருக்கின்றன.

ரஷ்யர்கள் வேதனை

நுகர்பொருட்களின் விலை அதிகரிப்பதாலும், பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டதாலும் ரஷ்யர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய முதல் வாரத்திலேயே நுகர்வோர் விலை குறியீட்டெண் 2.2 சதவீதம் அதிகரித்தது. உணவில் முக்கியப் பொருளான கோதுமை, பால், இறைச்சி, மீன், மதுபானம் ஆகியவற்றின் விலை உயரத் தொடங்கின. வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிப்பவை, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகியவற்றின் விலைகள் உயர்ந்தன அல்லது தட்டுப்பாடு தெரியத் தொடங்கியது. பல கப்பல் நிறுவனங்கள் தாங்களாகவே இறக்குமதிகளை நிறுத்திவிட்டன. பொருட்களை விற்றாலும் அதற்குப் பணம் பெற முடியாது என்று அவற்றுக்குத் தெரியும்.

ரஷ்யச் செலாவணியான ரூபிளின் மாற்று மதிப்பு குறையக் குறைய அதைச் சரிக்கட்டும் வகையில் சில்லறை விற்பனை விலைகளை வியாபாரிகள் உயர்த்தி வருகின்றனர். மாஸ்கோவில் மட்டும்தான் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. பிற நகரங்களில் போர்க்கால வாழ்க்கை நினைவுகள் பலருக்கும் திரும்பத் தொடங்கிவிட்டன. பிப்ரவரி 20-ம் தேதி 5,500 ரூபிள்கள் மதிப்புக்கு மளிகைச் சாமான்களை ஒரு குடும்பத் தலைவி வாங்கினார். அது முந்தைய மாதம் வாங்கிய அளவு. ஆனால் அதற்கு 8,000 ரூபிள்கள் என்று பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “எல்லா பொருட்களின் விலையும் இடைப்பட்ட காலத்தில் உயர்ந்திருக்கிறது. நீங்கள் பரவாயில்லை அடுத்த வாரம் வந்தால் இன்னும் இரண்டு மடங்குகூட உயர்ந்திருக்கும்” என்று கடைக்காரர் கூறியிருக்கிறார். சர்க்கரை, ஓட்ஸ் உள்ளிட்ட தானியங்களும் 20 சதவீதம் உயர்ந்துவிட்டன. கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் விலையை அதிகம் ஏற்றாமல் பார்த்துக் கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவசியப் பண்டங்களைப் பதுக்கினால் சிறையில் தள்ளுவோம் என்றும் எச்சரித்திருக்கிறது. நீரிழிவு, ரத்த அழுத்தக் குறைபாடுள்ள நோயாளிகள் அடுத்த மூன்று மாதத்துக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டனர். இதனாலேயே தட்டுப்பாடும் விலையுயர்வும் தொடங்கிவிட்டன. சர்க்கரை, காபிப்பொடி, சமையல் எண்ணெய்யையும் மக்கள் மூன்று மாதங்களுக்கு வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

வேகமடையும் விற்பனை

சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே ரஷ்யர்களுக்கு பொது விநியோக அமைப்பு தொடர்பாக ‘நல்ல அனுபவம்’ உண்டு. தரமுள்ள பொருட்கள் அதிகார வர்க்கத்தினருக்கும் சுமாரான ரகங்கள் பொது மக்களுக்கும் கிடைக்கும் என்பது தெரியும். எனவே நல்ல பொருட்களைத் தேவைக்கும் அதிகமாகவே வாங்குகின்றனர். ஐபோன்கள் என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் போன்கள் கடைகளில் விற்றுத் தீர்ந்துவிட்டன. வாங்குவதற்கு போட்டி இருந்ததால் கடைக்காரர்கள் மடமடவென விலையை 20% வரை உயர்த்திவிட்டனர். ஒரு வாடிக்கையாளர் கடைக்குள் வந்தவர்களைப் பார்த்து, “கடைசி ஐபோனை நான் வாங்கிவிட்டேன் - பாவம் நீங்கள்” என்று கேலியாக அனுதாபப்பட்டார். பிப்ரவரி மாத ஆரம்பத்தில் 70,000 ரூபிள்களுக்கு விற்கப்பட்ட மடிக்கணினிகள் விலை மாத இறுதிக்குள் ஒரு லட்சம் ரூபிள்களாகிவிட்டது. மாஸ்கோவில் இவை அனைத்தும் விற்றுத்தீரும்போது அதன் விலை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபிள்கள். பலர் இருந்த காசுக்கு மடிக்கணினிகளை மட்டுமே வாங்கினர், அதனுடன் இணைந்த சாதனங்களைப் பிறகு வாங்கிவிடுவோம் என்று கூறிச் சென்றனர். கணினி, செல்போன்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளில் தயாராகும் அனைத்து மின்னணு, நுகர்வுப் பொருட்களும் வேகமாக விற்றுத் தீருகின்றன. இனி இவை எப்போது கிடைக்குமோ என்றும் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் கார்களும் விற்றுத்தீர்ந்துவிட்டன. கார் வாங்கிய ஒருவர் காருக்குப் போட எண்ணெய் – ஃபில்டர்களைக்கூட முன்னெச்சரிக்கையாக அதிகமாக வாங்கிக்கொண்டார். குடும்பத்துடன் வந்த பேராசிரியர் ஃபிரிட்ஜ், குக்கர், வாஷிங்மெஷின், கெட்டில், கட்டிலில் போட மெத்தை, கப் போர்ட் என்று திருமண சீர்வரிசை செட் போல மொத்தமாக வாங்கிக்கொண்டார். அவர் வாங்கியதும் கடையில் சாமான்கள் காலியாகிவிட்டன. “விலையை ஏகத்துக்கு உயர்த்திவிட்டார்களா?” என்று ஒருவர் கேட்டார். “பாவம் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை, கடையை மூடிவிட்டார்கள்” என்று கிண்டல் செய்தார் பேராசிரியர்.

சோவியத் ஒன்றியத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய கிளைகளைத் திறந்த மெக்டொனால்ட் நிறுவனம் 847 கிளைகளையும் மூடிவிட்டது. அதன் தயாரிப்புகளை வாங்கிக் கொண்ட ரஷ்யர்கள் விலையைப் பத்து மடங்கு உயர்த்தி, “வெளிநாட்டு உணவைக் கடைசியாகச் சுவைக்க உங்களுக்கொரு வாய்ப்பு” என்று விளம்பரம் செய்து விற்றனர். ரஷ்ய அரசை ஆதரிக்கும் ஒருவரிடம் விலைவாசி உயர்வு பற்றிக் கேட்டபோது “இதெல்லாம் எங்களைப் பாதிக்காது, நாங்கள் (அரசு ஆதரவாளர்கள்) எப்போதும் சொகுசுப் பொருட்களாக வாங்குவது கிடையாது” என்று பதில் அளித்தார்.

ஸ்விஃப்ட் வங்கி தகவல் பரிவர்த்தனை நடைமுறையிலிருந்து ரஷ்யாவை விலக்கியதாலும் விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் நிதிச் சேவையை நிறுத்திவிட்டதாலும் ரஷ்யர்களுக்கு பாதிப்புதான். ரஷ்ய அரசின் மத்திய வங்கி, தங்களுடைய நாட்டுப் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்குச் சுருங்கும் என்று தெரிவித்துள்ளது.

தர்மசங்கடத்தில் இந்தியா

ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யாவின் கச்சா பெட்ரோலிய எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருப்பதால், அவற்றைக் கணிசமாக இந்தியாவுக்கு விற்கத் தயார் என்றும் விலையில் கூட தள்ளுபடி தருகிறோம் என்றும் ரஷ்யா அறிவித்திருக்கிறது. அத்துடன் இதற்குப் பணத்தை ரூபாயாகத் தந்தால் போதும் என்றும் கூறியிருக்கிறது. ரஷ்யாவை இதுவரை எதிர்த்து எந்தத் தீர்மானத்திலும் வாக்களிக்காமல் ஆதரவு காட்டுவதால் இந்தச் சலுகை. இந்திய அரசு இந்த வாய்ப்பை ஏற்க முடியுமா, அதை மேற்கத்திய நாடுகளும் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கும் நாடுகளும் எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. இந்தியாவின் தர்மசங்கட நிலை மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறது.

x