தீவிரமடையும் உக்ரைன் போர்: போலந்துக்கு மாற்றப்பட்ட இந்தியத் தூதரகம்


மார்ச் 9-ல் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு இலக்கான மரியுபோல் நகர மருத்துவமனை

உக்ரைன் போரின் 18-வது நாளான இன்று, கீவ், மரியுபோல், லிவிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஆரம்பத்தில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா, கடந்த சில நாட்களாக மேற்குப் பகுதி நகரங்கள் மீது தாக்குதலை விரிவுபடுத்தியிருக்கிறது. போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகர் அருகே உள்ள யாவோரிவ் ராணுவத் தளத்தின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லிவிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு எல்லை வழியே, போலந்து மூலம் போர்த் தளவாடங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பிவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்திவருகிறது.

ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பல நகரங்களில் சாலைகளில் சடலங்கள் கிடப்பதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்த இந்தியத் தூதரகம், அண்டைநாடான போலந்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியத் தூதரக அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த அதிகாரிகள், கடந்த சில நாட்களாக போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகரில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம் அலுவலகத்தில் இருந்தபடி பணியாற்றிவந்தனர்.

உக்ரைன் நிலவரம் குறித்து இன்று உயர் மட்டக் குழுவுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அதில் உக்ரைனில் தற்போது நிலவும் சூழல், ஆபரேஷன் கங்கா நடவடிக்கை மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டது என்பன உள்ளிட்ட விஷயங்கள் அவரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

x