ஒமைக்ரானால் பறிபோகும் உயிர்கள்: பரிதவிக்கும் ஹாங்காங் மக்கள்!


கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது மிக அற்புதமாக செயல்பட்டு நோய்ப் பரவலைத் தடுத்து அனைவருக்கும் பரிசோதனைகள் செய்த ஹாங்காங் இப்போது 60 வயதைத் தாண்டிய முதியவர்களை அதிக எண்ணிக்கையில் ஒமைக்ரானுக்குப் பறிகொடுத்துவருகிறது. முதியவர்களுக்கு தடுப்பூசிகளைப் போடுவதில் ஏற்பட்ட சுணக்கமே இதற்குக் காரணம் என்று தெரியவருகிறது.

நிலைமை மேலும் மோசமாகலாம்

ஹாங்காங்கில் ஒமைக்ரான் வைரஸ் காய்ச்சலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் ஆளாகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்தால் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் என்று அனைத்துக்குமே பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்று சுகாதாரத் துறை அஞ்சுகிறது. எல்லாமே கட்டுக்குள் இருந்ததைப் போலத் தோன்றியதால் அரசு மெத்தனமாக இருந்தது. ஆனால் ஐந்தாவது அலையில் காய்ச்சல் வேகமாகப் பரவியதுடன் மூத்தவர்களில் தடுப்பூசி போடாதவர்களை சாய்க்க ஆரம்பித்துவிட்டது. ஹாங்காங் மக்கள் தொகை அடர்த்திமிக்க பெரிய நகரம். இங்கு வாழ்வோரில் 80 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் விளைவுகளைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்று சுகாதாரத் துறையினர் அஞ்சுகின்றனர்.

இப்போதைக்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவோரை மட்டும் மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர். முதியோர்களுக்கென்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள புறநகர் மருத்துவமனைகளில்தான் அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. செல்போன்களைக்கூட எடுத்துச் செல்ல அனுமதியில்லை. முதியவர்கள் தேறினால் வீட்டுக்குத் தகவல் தந்து அனுப்பி வைக்கிறார்கள். இல்லாவிட்டால் உடலைப் பெற்றுச்செல்லுமாறு கூறி நோய் தொற்றாதபடிக்குத் துணியில் சுற்றித் தந்துவிடுகிறார்கள்.

தடுப்பூசியில் தடுமாற்றம்

நகர மக்களில் 80 சதவீதம் பேரில் 30 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டனர். எஞ்சியவர்கள் போட்டுக்கொள்ளவில்லை. மருந்தும் ஊசிகளும் தாராளமாகக் கிடைத்தும் மக்கள் முன்வரவில்லை. முதியவர்கள் வெளிப்படையாகவே தயக்கம் காட்டினர். ஹாங்காங் நகரிலேயே உலவிய வைரஸ் கிருமிகள் ஐந்தாவது அலையின்போது ஒமைக்ரானாக உருமாறி உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது.

ஐந்தாவது அலையில் இதுவரை 2,365 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 87 சதவீதம் பேர் 60 வயதைத் தாண்டியவர்கள். இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசியே போட்டுக்கொள்ளாதவர்கள். பெரும்பாலானோர் முதியோர்களுக்கான தனி இல்லங்களில் தங்கியிருந்தவர்கள். முதியோர் இல்லங்களில் 16,200 முதியவர்களுக்கும் 4,470 முதியோர் இல்ல ஊழியர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தற்காலிக மருத்துவமனைகள் தரும் அச்சம்

இப்போது மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுகள், தனிமை வார்டுகள் மட்டுமல்லாமல் ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்கும் சவக் கிடங்குகளும் நிரம்பிவிட்டன. எனவே புதிதாக மருத்துவமனைக்கு நோய் அறிகுறியுடன் வருகிறவர்களை வீட்டிலேயே தங்கி சிகிச்சை செய்துகொள்ளுமாறு கூறி அனுப்பிவிடுகின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளுக்கு முதியவர்களை அனுப்புகிறார்கள் என்றாலே உறவினர்கள் கலக்கம் அடைகிறார்கள். இனி காப்பாற்ற முடியாது என்று தீர்மானித்தவர்களைத்தான் அங்கு அனுப்புகிறார்கள்.

வீடுகளில் தனிமைப்படுத்தி பார்த்துக்கொள்ள பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. குடும்பங்களில் சிறு குழந்தைகளும் இன்னொரு முதியவரும் இருப்பதால், அவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்றிவிடுமே என்று அஞ்சுகிறார்கள். அது மட்டுமல்லாமல் பெரும்பாலானவர்கள் 300 சதுர அடி முதல் 500 சதுர அடி வரையுள்ள சிறு பகுதிகளில்தான் வசிக்கின்றனர். எனவே அங்கே நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவது என்பது பெயரளவுக்குத்தான். வீடுகளில் முதியவர்களுக்குக் காய்ச்சல் அதிகமாகி நினைவு தவறினால் மருத்துவமனைகளுக்கு உறவினர்கள் விடுக்கும் அழைப்புகள் ஏற்கப்படாமலேயே தவிர்க்கப்படுகின்றன. சில வேளைகளில் மட்டுமே தொலைபேசிகளுக்குப் பதில் கிடைக்கிறது - வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று.

பாராட்டும் அலட்சியமும்

கோவிட்-19 பெருந்தொற்று தொடக்க காலத்தில் நகரம் முழுவதுமே முழுதாகப் பொது முடக்கத்துக்கு ஆளானது. பிறகு அனைவருக்கும் கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதனால் உலக நாடுகள் பலவும் ஹாங்காங்கைப் பாராட்டின. அது முன்னுதாரணமாகவும் பேசப்பட்டது. ஆனால் முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதை மிக மிக தாமதாகத்தான் தொடங்கினர். தடுப்பூசியைவிட உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வைரஸ் வேகமாக வேலை செய்கிறது. எனவே உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. தடுப்பூசியைப் போட்டவுடனேயே அது வேலை செய்யத் தொடங்காது. அது உடலில் ஊறி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த சில நாட்கள் பிடிக்கும்.

ஹாங்காங் நகர நிர்வாகம் நடுவில் அரசியல் ரீதியிலான முடிவுகளுக்கு முக்கியத்துவம் தந்ததால் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் ஏற்பட்டுவிட்டது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஊசி போடச் சொன்னால் - போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பது, ஊசி போடவில்லை என்றால் - காத்திருந்தோம் ஊசி கிடைக்கவில்லை என்பது, ஏன் அவசரப்பட்டீர்கள் என்பது, ஏன் தாமதத்தீர்கள் என்பது என்று பலவிதமாக மக்கள் பேசுகின்றனர். இது உலகம் கண்டறியாத புதுவகை தொற்றுநோய் எனும்போது அனைவருமே எச்சரிக்கையாக இருந்து அரசு அல்ல - மருத்துவ நிபுணர்கள் கருத்தைக் கேட்டு நடப்பது நல்லது. நாம் நோய்க்கு ஆளாகாமல் இருப்பதுடன் மற்றவர்களுக்கும் நோயைப் பரப்பாமல் இருப்பது நம்முடைய கடமை என்பதை ஹாங்காங்வாசிகள் மட்டுமல்ல அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

x