மரியுபோல் சண்டை நிறுத்தத்தை மறுபடியும் மீறிய ரஷ்யா!


உக்ரைனில் போர் நடைபெறும் கீவ், செர்னிஹிவ், சுமி, கார்கிவ், மரியுபோல் நகரங்களில் மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடத்துக்கு வழிவகுக்கும் வகையில் இன்று சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ரஷ்யா அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

போர் நடக்கும் பகுதிகளில் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது, போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற வழிவகுப்பது போன்றவற்றை உள்ளடக்கிய நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடம் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், மரியுபோல் நகர மக்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், அங்கிருந்து மக்களை வெளியேற்றிச் செல்லவும் பேருந்துகள் அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்துகளின் முன்பக்கத்தில் ‘மக்கள்’ என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஏறத்தாழ 4.30 லட்சம் பேர் வசிக்கும் மரியுபோல் நகரத்திலிருந்து பாதிப் பேர் நகரைவிட்டு வெளியேற தயாராக இருந்தனர்.

ஆனால், பாதைகளில் மீண்டும் குண்டு வீச்சு தொடங்கியதால் மக்கள் வெளியேறுவது தடங்கலுக்குள்ளாகியிருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

சில பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் கண்ணி வெடிகளும் புதைப்பட்டிருந்தன என மரியுபோல் மேயர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மரியுபோல் நகர் கைப்பற்றப்பட்டுவிட்டால், க்ரைமியாவுக்குச் சாலை வழியாகச் செல்வதற்கு ரஷ்யாவுக்கு எளிதாகிவிடும். 2014-ல் உக்ரைனிலிருந்து ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பிராந்தியம் க்ரைமியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களிருந்து மக்கள் வெளியேறும் வகையில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என உறுதியளித்துவிட்டு மீண்டும் தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் நடத்திவரும் தாக்குதல்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. உணவு, குடிநீர், மருந்துகள் என அடிப்படைத் தேவைகள் குறைந்துகொண்டே வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குளிர்காய நெருப்பு, கழிப்பிட வசதி, செல்போன் என எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப் போரில் நாஜி படையினரின் ஊடுருவலின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு நிகராகக் கடும் நெருக்கடியில் உக்ரைன் இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸி கூறியிருக்கிறார்.

இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் துருக்கியில் வியாழன் அன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

இதுவரை 20 லட்சம் பேர் உக்ரைனைவிட்டு அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள் அகதிகளுக்கான் ஐநா ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருக்கிறார். போலந்தில் மட்டும் 12 லட்சம் பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1.41 லட்சம் பேர் போலந்துக்கு அகதிகளாகச் சென்றிருக்கின்றனர்.

x