ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு எதிராக வரிந்துகட்டும் 11 நாடுகள்!


சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுவருகிறது வட கொரியா. கடந்த சனிக்கிழமை அந்நாடு மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஆண்டில் அந்நாடு நடத்தியிருக்கும் 11-வது சோதனை இது. வட கொரியா இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தென் கொரியாதான் இது குறித்த தகவல்களை முதலில் வெளியிட்டது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகள் வட கொரியாவுக்கு நேற்று கண்டனம் தெரிவித்திருக்கின்றன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குப் பல முறை அழைப்பு விடுத்தும், வட கொரியா அதற்கு செவிசாய்க்காமல் ஏவுகணை சோதனைகளை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் அந்நாடுகள் கூறியிருக்கின்றன. இது ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் கண்டித்திருக்கின்றன.

இவ்விஷயத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அந்நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஐநாவின் அதிகாரமிக்க அமைப்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில், கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதன் நம்பகத்தன்மையைச் சிதைக்கிறது என்றும் அந்நாடுகள் விமர்சித்திருக்கின்றன.

2006-ல் முதன்முறையாக வட கொரியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது வட கொரியா அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதால், மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது.

எனினும், வட கொரியாவின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா இரண்டும் அந்நாட்டின் பொருளாதாரத் தடைகளின் வீரியத்தைக் குறைக்கும் வகையிலான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இந்தியா, ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.

தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிக்கொள்வதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பல முறை கூறியும் அந்நாடு அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

x