‘சுமியிலிருந்து வெளியேற பேருந்தில் காத்திருந்தோம். ஆனால்...’


உக்ரைன் நாட்டின் சுமி மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள், இந்தியாவுக்குத் திரும்பும் பயணத்தின் கடைசி நொடியில், சண்டை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு திட்டம் கைவிடப்பட்டதால், தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் மக்கள் வெளியேறுவதை அனுமதிக்கும் வகையில் நேற்று ரஷ்யா சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, இந்திய மாணவர்கள் 700 பேர் சுமி அருகில் உள்ள போல்டாவா நகரின் ரயில்வே நிலையத்துக்குச் செல்வதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் நாளே போல்டாவா நகரில் இந்தியத் தூதரகத்தின் குழு தயாராக இருந்தது.

ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் நகரம் என்பதால், ரஷ்யப் படைகளின் தாக்குதலை அதிகமாகவே சந்திக்கிறது சுமி. போர்ச் சூழலுக்கு நடுவே கடும் சிரமங்களுடன் அங்குள்ள ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் காலையிலேயே பேருந்துகளில் ஏறி பயணத்துக்குத் தயாராக இருந்தனர்.

கடும் குளிரில் காத்திருப்பு

முன்னதாக, வாகன சோதனை, மோசமான பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் பல்கலைக்கழகத்துக்குப் பேருந்துகள் வருவதற்கே தாமதமானது. இதனால், கடும் குளிரில் மூன்று மணி நேரம் மாணவர்கள் பேருந்துகளை எதிர்நோக்கிக் காத்திருக்க நேர்ந்தது. ஒருவழியாக, நான்கு பேருந்துகள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துசேர்ந்தன. ரயில் நிலையத்தில் மாணவர்களை விட்டுவிட்டு, மீண்டும் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி மிச்சம் இருக்கும் மாணவர்களை அழைத்துச் செல்வது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தில் மாணவிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேருந்திலேயே மாணவர்கள் காத்திருந்த நிலையில், ரஷ்யா அறிவித்திருந்த சண்டை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதால் பயணம் ரத்துசெய்யப்பட்டு அவர்கள் மீண்டும் ஹாஸ்டல்களுக்கே திரும்பிச் சென்றனர்.

உணவுக்குத் தட்டுப்பாடு

மாணவர்களிடம் ஏற்கெனவே கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை அன்று சற்றே துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருந்ததால், மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். பயணம் நிச்சயம் என்று எதிர்பார்ப்புடன் இருந்த மாணவர்கள், பயணத்துக்காகப் பைகளை ஏற்பாடு செய்தபோது, தங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு உதவிசெய்துவந்த உக்ரைன் நாட்டு ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டனராம். ஆனால், கடைசி நேரத்தில் பயணம் ரத்து ஆகிவிட்டதால், உணவுக்கு என்ன செய்வது எனும் கவலையில் அவர்கள் ஆழ்ந்திருக்கின்றனர்.

சுமி நகரில் இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் ‘குஸும் ஃபார்மஸி’ மருந்துக் கடை ஏற்பாடு செய்து தருவித்த உணவுகள்தான் தற்போது இந்திய மாணவர்களின் பசியாற்றிவருகிறது. எனினும், இப்போது இருக்கும் உணவுப் பொருட்கள் போதுமானவை அல்ல என்றே அங்குள்ள மாணவர்கள் கூறுகிறார்கள்.

இன்று அவர்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்படுமா எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

x