மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலன்: முரண்படும் உக்ரைன் - ரஷ்யா!


பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ரஷ்யப் பிரதிநிதிகள்...

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றியா தோல்வியா என்பதில் இரு தரப்பும் முரண்படுகின்றன. பெலாரஸ் - போலந்து எல்லையில் உள்ள பெலோவெஷ்கயா புஷ்சா நகரில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

இப்பேச்சுவார்த்தையின் மூலம், மனிதாபிமான அடிப்படையிலான பாதை தொடர்பான ஏற்பாடுகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் சார்பில் பங்கேற்ற மிகையிலோ போடோல்யாக் கூறியிருக்கிறார்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியான இர்பினில் ரஷ்ய குண்டுவீச்சில் பற்றியெரியும் கட்டிடங்கள்...

என்ன ஏற்பாடு அது?

மனிதாபிமான அடிப்படையிலான பாதை (humanitarian corridor) எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஏற்பாடு, போர் நடக்கும் பகுதிகளில் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது, போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற வழிவகுப்பது போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் மிகையிலோ போடோல்யாக், சண்டை நிறுத்தம், பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றுடன் அரசியல் ரீதியிலான தீர்வு குறித்தும் பேசப்பட்டதாக ட்வீட் செய்திருக்கிறார்.

ஆனால், “எங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. அடுத்த சுற்றில் எங்களுக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று ரஷ்யத் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குழுவின் தலைவர் விளாதிமிர் மெடின்ஸ்கி கூறினார். “இந்தப் பேச்சுவார்த்தையில் அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான விவாதங்கள் தொடர்ந்தன. எனினும், அது சிரமமாகவே இருக்கிறது. சாதகமான விஷயங்கள் குறித்து இப்போதே எதையும் சொல்லிவிட முடியாது”என்றும் அவர் தெரிவித்தார்.

சில முக்கிய ஒப்பந்த வரைவுகள் உட்பட ஏராளமான ஆவணங்களைத் தாங்கள் எடுத்துவந்ததாக ரஷ்யாவின் சார்பில் பங்கேற்றவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், அவற்றில் உக்ரைன் தரப்பு அங்கேயே கையெழுத்திடவில்லை; அவற்றை ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, உக்ரைன் மக்களை பெலாரஸுக்கும் ரஷ்யாவுக்கும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என ரஷ்யா முன்வைத்த யோசனையை உக்ரைன் புறக்கணித்துவிட்டது. கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி நகரங்களில் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி மக்கள் வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யா சொன்னது. ஆனால், இந்தத் திட்டம் ஓர் ‘அறமற்ற நாடகம்’ என விமர்சித்த உக்ரைன் தரப்பு, மக்களின் துன்பத்தைப் பயன்படுத்தி ‘தொலைக்காட்சி சித்திரத்தை’ உருவாக்க ரஷ்யா விரும்புவதாகக் கண்டித்திருந்தது. குறிப்பாக, ஒரு உக்ரைனியர் கூட ரஷ்யாவுக்குச் செல்வதை ஏற்க முடியாது என்றும் உக்ரைன் அரசு கூறியது.

ரஷ்ய அதிபர் புதின்

நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை

நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மார்ச் 10-ம் தேதி (வியாழக்கிழமை) துருக்கியில் உக்ரைன் - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என துருக்கி தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

புதின் - ஸெலன்ஸ்கி பேச்சுவார்த்தை?

இதற்கிடையே, இரு நாடுகளின் அதிபர்கள் இடையிலான பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் எனும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதுகுறித்து பேசியிருந்த உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா, “எங்கள் அதிபருக்கு எதைப் பற்றியும் அச்சம் இல்லை - புதினுடனான நேரடிச் சந்திப்பு உட்பட! புதின் அச்சப்படவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு அவர் வரட்டும். இருவரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தட்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

x