போருக்கு நடுவே உயிர்த்திருக்கப் போராடும் உக்ரைன் ஊடகங்கள்!


போர்க்களத்தில் ராணுவ வீரர்களுக்கு எத்தனை பொறுப்பும் கடமையும் இருக்கிறதோ அதே அளவுக்குப் பொறுப்பும் கடமையும் கொண்ட சுமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு. ஒரு பக்கம் தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தினரின் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் உண்மைச் செய்திகளை உலகுக்குச் சொல்ல வேண்டும். ரஷ்யப் படைகளின் இடைவிடாத் தாக்குதலில் உருக்குலைந்துகொண்டிருக்கும் உக்ரைனின் ஊடகவியலாளர்கள் இதே அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.

சமூக ஊடக யுகத்தில் நடக்கும் இந்தப் போரின் பல காட்சிகள், பொதுமக்களின் செல்போன்களில் பதிவுசெய்யப்படும் காணொலிகளாக உடனுக்குடன் பகிரப்பட்டு வைரலாகின்றன. எனினும், கள நிலவரங்கள், தரவுகள், நிகழ்வுகளின் பின்னணி எனப் பல்வேறு விஷயங்களை ஆய்வுசெய்து செய்திகளை வெளியிட வேண்டியிருக்கிறது.

2013-ல் உக்ரைனில் நடந்த மைதான் புரட்சி, அதன் தொடர்ச்சியாக ஆட்சியிழந்து ரஷ்யாவுக்கு அப்போதைய அதிபர் விக்டர் யானுகோவிச் தப்பிச் சென்றது, க்ரைமியாவை ரஷ்யப் படைகள் கைப்பற்றியது, டோன்பாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் என அந்நாட்டின் பல நிகழ்வுகளைப் பதிவுசெய்வதில் பெரிய சிரமங்களை எதிர்கொண்டிராத உக்ரைன் ஊடகவியலாளர்கள், தற்போது ரஷ்யா முழு வீச்சில் நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு நடுவே ஊடகப் பணியை மேற்கொள்வதில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஸ்கை நியூஸ் செய்தி சேனலின் செய்தியாளர் குழு ரஷ்ய துப்பாக்கி வீரர்களின் (ஸ்னைப்பர்) தாக்குதலுக்குள்ளான நிகழ்வைத் தொடர்ந்து, அந்தச் சேனலின் செய்தியாளர் குழு பிரிட்டனுக்கு இடமாறிவிட்டது. தாக்குதல் அச்சம் நிலவுவதால், அண்டை நாடுகளின் எல்லைக்கு அருகே செய்தி மையங்களைத் தொடங்கி இயங்கிவருகின்றன ‘ஸாபோரோனா’ உள்ளிட்ட சில உக்ரைன் ஊடகங்கள். வெவ்வெறு துறை செய்திகளைச் சேகரித்துவந்த உக்ரைன் ஊடகவியலாளர்கள் தற்போது முழு நேரப் போர்க்களச் செய்தியாளர்களாக மாறிவிட்டனர்.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள போர் அனுபவம் இல்லாத ஆண்களும் துப்பாக்கி ஏந்தி சண்டையிட வேண்டியிருக்கிறது. 18 வயது முதல் 60 வயதிலான ஆண்கள் கட்டாய ராணுவப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உக்ரைனைவிட்டு வெளியேறிவருகிறார்கள். இதனால், பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் நிலைமை மோசம்

பனிப்போர் காலத்துக்குப் பிறகு, ரஷ்யாவில் ஊடகச் சுதந்திரம் மிக மோசமான நிலையில் இருப்பதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சிபிஜே) தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே பைஸ் எனும் யூடியூபர், உக்ரைன் விவகாரம் தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டதற்காக, அரசின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில், 2020-ல் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல், கொலைகள் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இதன் மூலம் ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவில் முழு அளவில் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன; முடக்கத்தை எதிர்கொள்கின்றன. டிவி ரெயின் எனும் தனியார் செய்தி சேனலை மூட உத்தரவிட்டது புதின் அரசு. எக்கோ ஆஃப் மாஸ்கோ எனும் வானொலி நிலையமும் மூடப்பட்டுவிட்டது. பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் ரஷ்யாவில் முடக்கப்பட்டுவிட்டன. போர் குறித்து ‘பொய்ச் செய்திகள்’ பரப்பப்படுகின்றன எனும் காரணத்தைச் சொல்லி ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களும் தடைசெய்யப்பட்டுவிட்டன.

போர் குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை, மார்ச் 4-ல் ரஷ்ய அரசு நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x