‘சர்வதேச நீதிமன்ற விசாரணையில் ஆஜராக மாட்டோம்’ - ரஷ்யா திட்டவட்டம்!


தொடர்ந்து 12-வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. இந்தப் போரினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உக்ரைன் பொதுமக்களில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தாலும், பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகள் வழியே வெளியேறுகின்றனர். 18 முதல் 60 வயதிலான ஆண்கள் கட்டாயம் போரில் ஈடுபட வேண்டும் என அரசு கூறிவிட்டதால், பெண்கள், குழந்தைகள் மட்டுமே உக்ரைனை விட்டு வெளியேற முடிகிறது.

இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்திவரும் ரஷ்யாவைத் தடுத்து நிறுத்தப்போவது யார், அந்நாட்டுக்கு என்ன தண்டனை கிடைக்கும் எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வழக்கு தொடர்ந்திருக்கிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியையும் உக்ரைன் நாடியிருக்கிறது. ரஷ்யா போரை நிறுத்த, சர்வதேச நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஜோன் டோனோகுக்குக் கடிதம் எழுதியிருக்கும் நெதர்லாந்துக்கான ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர், இந்த விசாரணையில் பங்கேற்கும் எண்ணமில்லை என அதில் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்யாவின் இந்த முடிவு நீதிமன்றத்துக்கு வருத்தமளிப்பதாக ஜோன் டோனோக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, “மருத்துவ சேவைகள் உட்பட அரசின் பணிகள் எதையும் மக்களுக்கு எங்களால் வழங்க முடியவில்லை. சர்வதேச சட்டத்தை ரஷ்யா அவமதிப்பது இது முதல் முறையல்ல. இதன் மூலம், மனித குலம் மீது ரஷ்யா காட்டும் அவமதிப்பையும் வெறுப்பையும் உலகம் புரிந்துகொள்கிறது” என்று உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) விசாரணை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மீதான விசாரணையைக் கைவிட்டுவிட்ட ஐசிசி, ரஷ்யா விஷயத்தில் என்ன செய்யும் என உறுதியாகத் தெரியவில்லை. போர்க் குற்றம் தொடர்பான சான்றுகளைச் சேகரிப்பதே என்பது மிகவும் சவாலான காரியம் என்பது குறிப்பிடத்தக்கது!

x