போருக்கு எதிராக நிற்கும் புதினின் ‘நட்சத்திர’ நண்பர்கள்!


உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்தப் போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாக இதுவரை 4,300-க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் ஹாலிவுட் நண்பர்கள், அபிமானிகள் பலரும் இந்தப் போருக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர். திரைப்பட வர்த்தகத்தில், வளர்ந்துவரும் சந்தையாக இருக்கிறது ரஷ்யா. இதனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அந்நாட்டுக்குச் செல்வதும் புதினைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் உண்டு. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது உண்டு. 2007-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த எம்எம்ஏ நிகழ்ச்சியில், ‘யுனிவெர்சல் சோல்ஜர்’ திரைப்படப் புகழ் வான் டாம்மி கலந்துகொண்டார். 2010-ல் ரஷ்யாவில் நடந்த புலிகள் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் ‘டைட்டானி’ புகழ் லியனார்டோ டி காப்ரியோ கலந்துகொண்டார். இப்படிப் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் புதினுடன் நட்பு பாராட்டியிருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு உக்ரைன் போரில் அமெரிக்க அரசு மட்டுமல்ல, ஹாலிவுட் திரையுலகத்தினரும் புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். ஏஞ்சலினா ஜோலி, ஷான் பென், மார்க் ரஃபலோ என ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் போரில் உக்ரைன் பக்கம் நிற்கிறார்கள்.

நடிகர்கள் மிக்கி ரூர்கி, ஸ்டீவன் சீகல், இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் ரஷ்யா மீது தனித்த பாசம் காட்டியவர்கள். அதுமட்டுமல்ல, 2014-ல் க்ரைமியாவை ரஷ்யாவுடன் புதின் இணைத்துக்கொண்டபோது இவர்களில் பலர் ரஷ்யாவை ஆதரித்தனர்.

க்ரைமியா ஆக்கிரமிப்பு நியாயமானது எனக் கூறியவர் ’அண்டர்சீஜ்’ புகழ் ஸ்டீவன் சீகல். 2016-ல் ரஷ்யக் குடியுரிமை பெற்ற ஸ்டீவன் சீகல், ‘உலகின் சிறந்த தலைவர்களில் ஒருவர்’ எனப் புதினைப் புகழ்ந்திருந்தார். இன்றைக்கு உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலைக் கண்டித்திருக்கும் அவர், “உக்ரைன், ரஷ்யா இரண்டு நாடுகளையும் ஒரே குடும்பமாகவே பார்க்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

x