‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ - உக்ரைன் அதிபர் ஆவேசம்


உக்ரைன் போரின் 12-வது நாளான இன்றும் ரஷ்யப் படைகளின் தாக்குதல் குறையவில்லை. இதுவரை 15 லட்சம் பேர் அகதிகளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐநா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிக வேகமாக அதிகரித்துவரும் அகதிகள் பிரச்சினை இது என்று குறிப்பிட்டிருக்கிறது.

எண்ணெய் இறக்குமதிக்குத் தடை?

மேற்கத்திய நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். இதுவரை ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை. தற்போது தாக்குதல் மேலும் அதிகரித்திருப்பதால், எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்யத் திட்டமிடுகிறது அமெரிக்கா.

மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை

முதல் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்ட நிலையில், மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

துறைமுக நகரான மரியுபோல் மற்றும் அதன் அருகில் உள்ள வோல்னோவாகா நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி தந்த ரஷ்யா அதை இதுவரை நிறைவேற்றவில்லை. ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், அந்நகரங்களைவிட்டு வெளியேற காத்திருந்த மக்கள் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஸெலன்ஸ்கி எச்சரிக்கை

இந்நிலையில், காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “இது கொலை. திட்டமிட்ட கொலை. இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். எங்கள் மண்ணில் போர் நடத்தி அட்டூழியம் செய்த ஒவ்வொருவரையும் நாங்கள் தண்டிப்போம்” என்று எச்சரித்திருக்கிறார்.

மூன்றாவது உலகப் போர்?

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலைக் கட்டுப்படுத்த உக்ரைனில் ‘நோ ஃப்ளை ஸோன்’ அறிவிக்குமாறு அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை இதுவரை நேட்டோ அமைப்பு ஏற்கவில்லை. அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக இந்நடவடிக்கையை மேற்கொண்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என்று அமெரிக்காவின் குடியரசுக் கட்சி எம்.பி-யான மார்க்கோ ரூபியோ கூறியிருக்கிறார். ‘நோ ஃப்ளை ஸோன்’ அறிவிக்கப்பட்டால், ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகுக்கும் பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x