உக்ரைன் அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் பிரிட்டன்!


உக்ரைன் அகதிகள் விஷயத்தில் பிரிட்டன் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக, பிரான்ஸ் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரான்ஸ் உள் துறை அமைச்சர் ஜெரால்டு டர்மானின் பிரிட்டன் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

உக்ரைனிலிருந்து தப்பி வந்திருக்கும் அகதிகள் பிரிட்டனில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் இணைய பிரான்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள கலே துறைமுகத்தில் காத்திருப்பதாக ஜெரால்டு டர்மானின் கூறியிருக்கிறார். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டன் செல்வதற்காக அங்கு காத்திருக்கும் உக்ரைன் அகதிகள் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறிய அவர், கடந்த சில நாட்களில் இப்படி 150 பேர் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

பாரிஸில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளை அணுகி விசா பெறுமாறு அகதிகளிடம் பிரிட்டன் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை எனக் கூறியிருக்கும் அவர், கலே நகரிலேயே, முறையான தூதரக சேவை அலுவலகம் திறக்க வேண்டும் என்றும் பிரிட்டன் அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

உக்ரைனிலிருந்து போலந்துக்கு வரும் அகதிகளுக்கு இது தொடர்பான சேவையை அளிக்க முன்வரும் பிரிட்டன், தனது மிக நெருங்கிய அண்டை நாடான பிரான்ஸில் இந்தச் சேவையை அளிக்க மறுப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக, பிரிட்டன் உள் துறைச் செயலாளர் பிரீத்தி படேலுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாய் வழியாகப் படகுகளில் பிரிட்டனுக்குச் செல்லும் அகதிகள் பலர் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் பல முறை நடந்திருக்கின்றன.

அதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெரால்டு டர்மானின், உக்ரைன் அகதிகளுக்கு விசா வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் ரகசியமாக ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்.

x