எதிர்த்துப் போரிடுவதை உக்ரைன் நிறுத்தினால்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவோம்!


உக்ரைன் போர் நிலவரம் தொடர்பாக, துருக்கி அதிபர் எர்டோகனுடன் இன்று தொலைபேசியில் பேசினார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது, பேச்சுவார்த்தை நடத்தும் உக்ரைனியர்கள், மேலும் அதிக ஆக்கபூர்வ அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்; கள நிலவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, ரஷ்யாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால்தான் இந்தச் சிறப்பு நடவடிக்கையை நிறுத்துவது சாத்தியமாகும்” என்று எர்டோகனிடம் புதின் தெரிவித்ததாக ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான போரைக் குறிப்பிட, ‘சிறப்பு நடவடிக்கை’, ‘ராணுவ நடவடிக்கை’ போன்ற பதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது. ஆனால், இது ராணுவ நடவடிக்கை அல்ல; போர் என போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார்.

செயின் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் வாராந்திர உரை நிகழ்த்திய அவர், “உக்ரைனில் ரத்த ஆறும், கண்ணீர் ஆறும் ஓடுகின்றன. இது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, மரணம், அழிவு, துயரத்தை ஏற்படுத்தும் போர்” என்று வேதனையுடன் கூறினார்.

x