ரஷ்யாவின் தோல்வியை உறுதிசெய்ய சர்வதேச செயல் திட்டம்!


உக்ரைன் போர் நிலவரம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் நாளை (மார்ச் 7) ஆலோசனை நடத்துகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். நாளை கனடா, நெதர்லாந்து பிரதமர்களுடன் பேசும் அவர், செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைனின் அண்டை நாடுகளான செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசவிருக்கிறார். போரின் விளைவாக உக்ரனிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏராளமானோர் புகலிடம் தேடி அகதிகளாகச் செல்கிறார்கள். இதுவரை 14 லட்சம் பேர் அகதிகளாகியிருப்பதாகக் கருதப்படுகிறது.

6 அம்சத் திட்டம்

இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக 6 அம்சத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் போரிஸ் ஜான்சன். இந்தப் போரில் ரஷ்யா தோல்வியடைவதை உறுதிசெய்ய, இந்தத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவ மனிதாபிமான அடிப்படையில் சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவது, உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது, ரஷ்யா மீது பெரிய அளவிலான பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

அதேசமயம், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தங்கள் படைகளை அனுப்புவது குறித்த திட்டம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

மேலும் பொருளாதாரத் தடை

இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடன் பேசிய உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா, ரஷ்யா மீது மேலும் பொருளாதார நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

x