வலியில் நிறம் காண்பது ஊடக தர்மமல்ல!


ரஷ்யாவின் யுத்த வேட்கையில் உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாவதையும் ஏதிலிகளாக்கப்பட்டு தத்தளிப்பதையும் பார்த்துப் பரிதவிக்கிறோம். லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டு தஞ்சமடைய இடம் தேடுவதையும், உக்ரைன் வாழ் வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு எப்படியாவது தப்பிச்செல்ல துடிப்பதையும் பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது.

தமிழகம் திரும்பிய மாணவர்கள்...

உக்ரைனில் சிக்கி இருக்கும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களையும், பொதுமக்களையும் மீட்டு தாயகம் அழைத்துவரும் நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்துவருகிறது. இதில் தமிழக அரசும் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதேபோன்று வேறு பல நாடுகளின் அரசுகளும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்களது மக்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்துவரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

உக்ரைன் உக்ரத்தை உலகுக்குச் சொல்ல வேண்டிய இந்த நேரத்திலும் தங்களின் நிறவெறியை வெளிக்காட்டி வருகின்றன சில சர்வதேச ஊடகங்கள். இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஊடகங்களில் பெயர்களைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். அந்த அளவுக்குச் சமரசமின்றி நீதிக்காக உரக்க ஒலிக்கும் சர்வதேச ஊடகங்களாகப் பெயர்பெற்றவை அவை. எத்தகைய நிற துவேஷத்தை அந்த ஊடகங்கள் பரப்புகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.

உக்ரைனிலிருந்து வெளியேறும் ஐரோப்பியர்கள்

நிலவியல் அடிப்படையில் உக்ரைனை புரிந்துகொள்வதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது பெரிய நாடு உக்ரைன். போலாந்து, ஸலோவாக்கியா, ஹங்கேரி, ரொமானியா, மால்டோவா உள்ளிட்டவை உக்ரைனின் எல்லையோர நாடுகள். ஆகையால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் உக்ரைனில் வசித்து வருகிறார்கள். இதுதவிர ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டினர் பலரும் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உக்ரைனுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

இதில் போலாந்து நாட்டையொட்டிய மேற்கு உக்ரைனில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் நைஜீரியா, மொரோக்கோ, எகிப்து ஆகிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இதர ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் உக்ரைனில் உயர் கல்விக் கட்டணம் குறைவென்பதால் 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் தற்போது பாதுகாப்புக்காக போலாந்தில் தஞ்சமடைய முயன்று வருகின்றனர். ஆனால், நிறம், இனம் சார்ந்த வெறுப்பு காரணமாக அவர்கள் நிறவெறியை எதிர்கொள்வதாக ஆதாரங்களுடன் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ஆசியர்களுக்கான முகாமிலிருந்து...

மறுபுறம் கார்கிவ், கீவ் போன்ற நகரங்களில் இந்தியாவின் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களுக்கும் நிறவெறி தாக்குதல் நிகழக்கூடும் என்கிற அச்சம் மூண்டுள்ளது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத ஐரோப்பிய ஊடகங்கள், போரினால் பாதிக்கப்படும் ஐரோப்பியர்கள் வாழும் கலவரப் பகுதிகளை மட்டுமே செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டைப் பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். போருக்கு அப்பால் போரைக் காரணமாக வைத்து ஆசியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் நிறவெறி தாக்குதல்களை ஐரோப்பிய ஊடகங்கள் பேசுவதில்லை என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதை நிரூபிக்கும் விதமாக, நிறவெறியுடனும் பாரப்பட்சத்துடனும் உக்ரைன் யுத்த செய்திகளை வெளியிடும் சில சர்வதேச தொலைக்காட்சி சேனல்களின் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றில், பிபிசி தொலைக்காட்சிக்காகப் பேசிய வீடியோ பதிவில் உக்ரைன் அரசு தரப்பில் பேசிய செய்தித் தொடர்பாளர், “நீல நிற கண்களும் பொன்னிற கூந்தலும் கொண்ட ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டிருப்பதை பார்க்கவே மனம் பதைபதைக்கிறது” என்றார். தங்களது நாடு சூறையாடப்பட்டதால் தங்களுடைய உற்றார், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களை கண்டு அவரது இதயம் துடிதுடிக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் கண் மற்றும் கூந்தலின் நிறம் அவரைத் துடிதுடிக்கச் செய்திருப்பது அப்பட்டமான நிறவெறியைக் காட்டிக்கொடுத்தது.

அடுத்து, என்பிசி நியூஸ் தொலைக்காட்சியின் நிருபர் பேசுகையில், “உக்ரைனில் சிக்கித் தவிப்பவர்கள் ஒன்றும் சிரியா நாட்டு அகதிகள் அல்ல. இவர்கள் கிறிஸ்தவர்கள், வெள்ளையர்கள், நம்மைப் போன்றவர்கள்” என்றார். இதிலிருந்து அவர் சொல்ல வருவது சிரியாவின் மக்கள் முஸ்லிம்கள். அவர்களது சிகையின் நிறம் கருப்பு, சருமத்தின் நிறமும் மானிறம் என்பதால் அவர்கள் ஐரோப்பாவுக்கு முக்கியமில்லை என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைன் நாட்டின் சிபிஎஸ் சிறப்பு நிருபர் களநிலவரம் குறித்து பேசுகையில், “உக்ரைனில் கொல்லப்படும் மக்கள் நாகரிகமானவர்கள், ஐரோப்பியர்கள். இராக், ஆப்கானிஸ்தான் போல போரால் குத்திக் கிழிக்கப்பட்டுப் பழக்கப்பட்டவர்கள் அல்லர்” என்றார். அப்படியானால் அந்த செய்தியாளருக்கு யுத்தம் நடைபெறுவதில் ஆட்சேபனை இல்லை. ஐரோப்பாவில் யுத்தம் என்பது மட்டுமே அவரது கவலை. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் குடிமக்கள் நாகரிகமற்றவர்கள், பண்பாடற்றவர்கள், அவர்களது அரசும் ஒழுங்கற்றது. ஆகவே அம்மக்களை யார் வேண்டுமானாலும் தாக்கலாம், கொல்லலாம் என்பதாகவே இவரது கருத்து பிரதிபலிக்கிறது.

அதிலும் கத்தார் நாட்டின் மிகமுக்கியமான செய்தி நிறுவனமான அல்ஜசீராவின் செய்தியாளர், “இம்மக்கள் செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேற முயலும் அகதிகளைப் போன்றவர்கள் அல்லர்” என்றார். ஆக மொத்தம் யுத்தத்தைப் பற்றிய துளி அளவும் புரிதலற்றவர்களை யுத்த பூமியின் களநிலவரத்தை செய்தியாக்க இத்தகைய செய்தி நிறுவனங்கள் நியமித்திருக்கிறது.

இவ்வாறு, சிறந்த சர்வதேச ஊடகங்களாக அறியப்படுபவை நிறவெறி பார்வையுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைச் செய்தியாக வெளியிடுவதற்கு அமீஜா என்றழைக்கப்படும் அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஒருதலைபட்சமான செய்திகள் வெளியிடுவது தவறு என்பதை தங்களது செய்தியாளர்களுக்கு ஊடக நிறுவனங்கள் பயிற்றுவிக்க வேண்டும். குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியத்தின் பண்பாட்டு, அரசியல் நுணுக்கங்களை உள்வாங்கிக் கொண்டு செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டுமே அன்றி அமெரிக்க அல்லது ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, பொருத்தமற்ற ஒப்பீடுகளுடன் செய்திகளை வெளியிடுதல் பாரபட்சத்தை மேலும் கூர்தீட்டும், பார்வையாளர்களைத் திசை திருப்பும். கடைசியில் மனிதநேயத்தைக் கொன்றுவிடும்’ என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீஜா சுட்டிக்காட்டியிருப்பவை காலத்துக்கு அவசியமானது. வலியில் யாருடைய வலி ஒசத்தி என்பதை பார்த்துச் செய்திகள் வெளியிடுவது ஊடக தர்மமல்ல. சாதி, இனம், பாலின பேதமின்றி நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கு உள்ளது. இதை, பொறுப்பற்ற நிலையில் செய்தி சொல்லும் ஊடகங்கள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்.

x