இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டாம்: வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்


உக்ரைனின் சுமி நகரத்தில் இருந்து தேசிய கொடியுடன் வெளியேறிய இந்திய மாணவ, மாணவிகள்

"உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் இடங்களில் இருந்து வெளியே செல்ல வேண்டாம்" என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உச்சத்தை அடைந்துள்ளது. ரஷ்ய படை தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இந்திய மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை பத்திரமாக மீட்கும் பொருட்டாக மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது ரஷ்யா. மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை மீட்க வசதியாக இந்த தற்காலிக போர் நிறுத்தம் என அந்நாடு தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து இந்த போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் திடீரென வெளியேறியுள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய மாணவ, மாணவிகள், "நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம். இனியும் எங்களால் காத்திருக்க முடியாது. உயிரை பணயம் வைத்து எல்லைக்கு செல்ல முடிவெடுத்துவிட்டோம். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தூதரகமும், அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆப்ரேஷன் கங்கா திட்டம் தோல்வியடைந்துவிட்டது. சுமி பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வெளியிடப்படும் கடைசி வீடியோ இது. எங்களது உயிரை பணயம் வைக்க முடிவெடித்துள்ளோம். எங்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். உயிரை பணயம் வைத்து இங்கிருந்து எல்லை நோக்கி புறப்படுகிறோம்" என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் இடங்களில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்றும் மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூரதகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

x