‘இன்று முதல் நிகழப்போகும் இறப்புகளுக்கு நேட்டோ தான் காரணம்!’


2014-ல் உக்ரைனிலிருந்து க்ரைமியாவை ரஷ்யாவைக் கைப்பற்றிய நிகழ்வுக்குப் பின்னர், பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் இருந்தது உக்ரைன். அமைப்பு ரீதியான ஆதரவு வேண்டும் என்பதற்காகவே நேட்டோ அமைப்பில் சேர ஸெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விண்ணப்பித்தது. உண்மையில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க முக்கியக் காரணமே, நேட்டோ அமைப்பில் அந்நாடு சேர்ந்துவிடக் கூடாது எனும் எண்ணம்தான். பிப்ரவரி 24-ல் தொடங்கிய ரஷ்யாவின் தாக்குதல் தற்போது உச்சமடைந்திருக்கும் நிலையில், நேட்டோ மீதே அதிருப்தியில் ஆழ்ந்திருக்கிறது உக்ரைன்.

ஏவுகணைத் தாக்குதல், வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், வேக்குவம் குண்டு வீச்சு எனப் பல்வேறு வகையிலான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யப் படைகளை உக்ரைன் படையினர் தீரத்துடன் எதிர்கொள்கிறார்கள். என்றாலும், ஒப்பீட்டளவில் ரஷ்யாவை விட மிகச் சிறிய ராணுவத்தைக் கொண்ட உக்ரைனால் ரஷ்யா ஏற்படுத்தும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் ‘நோ ஃப்ளை ஸோன்’ அமல்படுத்தப்பட வேண்டும் என நேட்டோ அமைப்பிடம் ஸெலன்ஸ்கி அரசு கோரியிருந்தது.

எனினும், அப்படிச் செய்தால், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ரஷ்யா ஐரோப்பா முழுவதும் விரிவான அளவில் போரைத் தொடங்கிவிடும் எனும் காரணத்தை சொல்லி உக்ரைனின் வேண்டுகோளை நேட்டோ மறுதலித்துவிட்டது.

இதனால், ரஷ்யாவின் கரங்கள் கட்டப்படாமல் வான்வழித் தாக்குதலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறது உக்ரைன்.

இந்நிலையில், நேற்று இரவு காணொலியில் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, “இன்றைய நாள் முதல் (ரஷ்யத் தாக்குதலில்) ஏற்படப்போகும் உயிரிழப்புகளுக்கு நீங்கள் (நேட்டோ) தான் காரணம். உங்கள் பலவீனமும் ஒற்றுமையின்மையும்தான் காரணம். ‘நோ ஃப்ளை ஸோன்’ அமல்படுத்தப்பட மறுதலித்துவிட்டதன் மூலம் உக்ரைன் நகரங்கள் மீதும் கிராமங்கள் மீதும் குண்டுகள் வீசப்படுவ்தற்கு நேட்டோ கூட்டணி பச்சை விளக்கு (அனுமதி) அளித்துவிட்டது” என்று வேதனை தெரிவித்தார்.

“தனது கொள்முதல் அமைப்பின் மூலம், உக்ரைனுக்காக 50 டன் டீஸல் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதுதான் இன்று நேட்டோ கூட்டணி செய்த ஒரே வேலை. ஒருவேளை அதை வைத்து புடாபெஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாம் எரித்துவிடலாம் போலும்” என்று ஸெலன்ஸ்கி கூறினார். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை பெலாரஸ், கஜகஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகள் கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்படுத்திய ஒப்பந்தம் அது.

மேலும், “ஐரோப்பாவுக்காக நாங்கள் சிந்தும் லிட்டர் கணக்கான ரத்தத்துக்கு, லிட்டர் கணக்கான டீஸல் மூலம் கடனை நீங்கள் அடைத்துவிட முடியாது. உக்ரைனியர்கள் தொடர்ந்து இந்தப் போரை எதிர்கொள்வோம். ஒன்பது நாட்களாக இருளையும் தீமையையும் எதிர்கொண்டு ரஷ்யாவின் ஊடுருவல் திட்டத்தை முறியடித்துவிட்டோம். நாங்கள் ஒளியின் வீரர்கள். ஐரோப்பாவின் வரலாறு இதை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருக்கும்” என்று உணர்ச்சி பொங்க பேசினார் ஸெலன்ஸ்கி!

x