ஃபேஸ்புக், ட்விட்டரை ரஷ்யா தடை செய்தது ஏன்?


உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலுக்கு நடுவில், ஊடகத்திலும் இணைய வெளியிலும் ரஷ்யா ஏராளமான தடைகளையும் தடங்கல்களையும் ஏற்படுத்திவருகிறது.

புதின் அரசு முன்னெடுக்கும் இந்தப் போரை ரஷ்யர்கள் பலர் வெறுக்கிறார்கள். பொதுமக்கள் தொடங்கி, ஊடகவியலாளர்கள் வரை பலரும் போருக்கு எதிராகப் பேசிவருகிறார்கள். அதேவேளையில் ஊடகங்கள் உக்ரைன் போர் தொடர்பான எதிர்மறைச் செய்திகளை வழங்கிவிடாத வகையில் புதின் அரசு கண்டிப்புடன் செயல்படுகிறது. இதன் காரணமாக உண்மையான தகவல்களையும், போர்க்கள நிலவரங்களையும் தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களையே ரஷ்யர்கள் பலர் சார்ந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், ரஷ்யாவின் சார்பில் போலிச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை ஃபேஸ்புக் கொண்டுவந்தது. சுயாதீன ஊடகங்களின் ஃபேஸ்புக் பக்கங்கள் எனும் பெயரில் தொடங்கப்பட்ட சில ஃபேஸ்புக் பக்கங்களில் போலிச் செய்திகள் பரப்பப்படுவதை கவனித்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ அவற்றை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஃபேஸ்புக்கை முற்றிலுமாகத் தடை செய்திருக்கிறது ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ரோஸ்கோம்னாட்ஸர். கூடவே ட்விட்டரையும் தடை செய்திருப்பதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் ரோஸ்கோம்னாட்ஸர், 2020 அக்டோபர் முதல் ஃபேஸ்புக்கில் ரஷ்ய ஊடகங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், ரஷ்ய அரசின் ஆதரவுடன் நடைபெறும் ரஷ்யா டுடே, ஆர்ஐஏ போன்ற செய்தி நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறது. ரஷ்ய மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஃபேஸ்புக் மீது கடந்த வாரம் குற்றம்சாட்டிய ரோஸ்கோம்னாட்ஸர், அதன் மீது பகுதியளவில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாகத் ‘தவறான’ செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கும் வகையிலான சட்டம் நேற்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x