உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் கார்கிவ், கீவ், சுமி உள்ளிட்ட நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அதிலும் சுமி மாநிலப் பல்கலைக்கழகத்தில் 700 இந்திய மாணவர்கள்வரை சிக்கித் தவிக்கின்றனர். அம்மாணவர்களில் பலர் ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலுக்குப் பயந்து பதுங்குகுழிக்குள் ஓடி ஒளியும் பரபரப்பு வீடியோவை அம்மாணவர்களில் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கிழக்கு உக்ரைனில் உள்ள சுமி மாநில பல்கலைக்கழகத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போரில் மிகவும் பதற்றமான பகுதி அது. அங்கு அடிக்கடி குண்டு வீச்சும் வான்வழித் தாக்குதலும் நடந்து கொண்டிருக்கிறது. சுமி மாநில பல்கலைக்கழகத்திலும் கார்கிவ் பிராந்தியத்திலும் சிக்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகளை ரஷ்ய தேசிய ராணுவ கட்டுப்பாட்டு மையம் இன்று அனுப்பி வைத்தது. ரஷ்யாவின் பெல்கராட் பிராந்தியத்தில் உள்ள நெகோடியேவ்கா மற்றும் சுத்ஷா பகுதிகளில் அந்த பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், உக்ரைனுக்குள் இன்னமும் அவை நுழையவில்லை. ஆனால் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்கள் மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலிருந்து தொலைவில் இருப்பதாலும் மாணவர்கள் நடமாட முடியாத பதற்றமான போர் சூழல் மூண்டிருப்பதாலும் செய்வதறியாமல் அச்சத்தில் மாணவர்கள் உறைந்திருக்கிறார்கள்.
இத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து மாணவர்கள் வெளியேறிப் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற தேவையான உதவிகளைச் செய்யும்படி உக்ரைன் அதிகாரிகளிடம் தாங்கள் பேசும்படி கோரிக்கை வைக்கிறேன். அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வந்து சேர்ந்து இந்தியா திரும்ப முடியும்” என்று கனிமொழி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களில் இதுவரை 471 மாணவர்கள் இந்திய அரசால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 191 மாணவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.