உக்ரைனை ஏன் எளிதில் வெல்ல முடியவில்லை ரஷ்யாவால்?


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதும், ஓரிரு நாட்களிலேயே பணிந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். அப்படி நடக்கவில்லை. பல பாதிப்புகள் நேர்ந்தபோது உக்ரைனியர்கள் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள்.

போரில் உக்ரைனுக்குப் பல இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், ரஷ்யாவும் தன் தரப்பில் இழப்புகளைச் சந்தித்துதான் வருகிறது. ரஷ்ய ராணுவம் ஓட்டி வந்த ராணுவ லாரிகள், கவச வாகனங்கள், டாங்குகளில் பல பழுதுற்று சாலையோரம் அப்படியே கேட்பாரற்று விடப்பட்டுள்ளன. போருக்குச் செல்லும் எந்த ராணுவமும் இப்படி எதிரி தாக்குவதற்கு முன்னதாகவே தனது வாகனங்களை இழந்ததில்லை. தாக்குதல் பற்றிய கட்டளை கடைசி நேரத்தில் கிடைத்ததால் பாசறையில் தயாராக இல்லையோ அல்லது ராணுவ வாகனங்களில் பல இப்படித்தான் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றனவா என்று மேற்கத்திய நாடுகள் வியப்பு தெரிவிக்கின்றன.

காட்டு வழியில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எளிதாக முன்னேறிய ரஷ்ய ராணுவ வாகனங்களை, நகரங்களுக்குள் வந்த பிறகு மறைந்திருந்த உக்ரைன் வீரர்கள் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், நடுத்தர ரக இயந்திரத் துப்பாக்கிகள் மூலமே சேதப்படுத்தி பயன்படுத்த முடியாமல் முடக்கிவிட்டனர். ரஷ்ய வீரர்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு உணவு, குடிநீருடன் அனுப்பப்பட்டுள்ளனர். பசியாலும் களைப்பாலும் வாடும் அவர்கள் இரவு நேரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடி உணவுப் பண்டங்களை அள்ளிச் செல்கின்றனர். இது ராணுவ அமைச்சருக்குப் பெருத்த தலைக்குனிவாக இருக்கிறது.

மோதிக்கொள்ளும் உறவுகள்

ரஷ்யர்களில் பலருக்கு உக்ரைன் மொழியும் உக்ரைனியர்கள் பலருக்கு ரஷ்ய மொழியும் தண்ணீர் பட்டபாடு. அத்துடன் ஒரே குடும்பத்திலேயே அம்மா உக்ரைனியர், அப்பா ரஷ்யர் என்றெல்லாம் இருப்பதால் உணர்வுபூர்வமாகவும் ரஷ்யர்கள் முழு மனதோடு உக்ரைனியர்களைத் தாக்கத் தயங்குகின்றனர். தொலைவிலிருந்து பீரங்கிகளாலும் டாங்குகளாலும் ஏவுகணைகளாலும் தாக்கும் ரஷ்ய வீரர்கள் நேருக்கு நேர் உக்ரைனிய மக்களைப் பார்க்கும்போது நிதானிக்கின்றனர். இதனால்தான் இந்த ஆக்கிரமிப்பு எதிர்பார்த்த வேகத்தில் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தரவில்லை என்கின்றனர்.

ரஷ்ய மக்களுக்கு உக்ரைன் போர் குறித்த உண்மைகள் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் அரசு தரும் தகவல்கள் காணொலிகளை மட்டுமே வெளியிடுகின்றன. சமூக ஊடகங்கள் தணிக்கைக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாகிவிட்டன. ரஷ்யாவுக்கு தோல்வி என்றோ சிக்கல் என்றோ, எத்தனை நாடுகள் எதிர்க்கின்றன என்றோ எந்தத்தகவலும் மக்களைச் சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

புதினைப் பாராட்டியும் உக்ரைனுக்கு நேர்ந்த சேதங்களை மட்டும் காணொலிக் காட்சியாகக் காட்டியே செய்திகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஊடகங்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. சர்வாதிகாரிகள் எப்போதுமே இப்படித்தான் நடந்துகொள்வார்கள். ஆனால், உண்மையை நிரந்தரமாக மூடிவைக்க முடியுமா என்ன?

x