உக்ரைன் போர்: பழைய சகாக்களையே நம்பும் புதின்!


உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்கிவிட்டு உலக நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கேஜிபி என்று அழைக்கப்படும் உளவு நிறுவனத்தில் 16 ஆண்டுகள் அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்போது அவருடைன் பணிபுரிந்த மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த காவல் துறை, ராணுவத் துறை அதிகாரிகளையே இப்போது பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார். செசன்யா, ஜார்ஜியா, கிரைமியா போர்களில் அடுத்தடுத்து கண்ட வெற்றியால் தன்னம்பிக்கை அதிகம் பெற்று இப்போது உக்ரைனையும் வெல்லப் பார்க்கிறார்.

உக்ரைனை ரஷ்யாவால் வெல்ல முடியாமல் போகாது, ஆனால் எத்தனை நாள் வரை உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் கேள்வி என்று நடுநிலையான ராணுவ நிபுணர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். உக்ரைனைவிட பரப்பளவில், மக்கள் தொகையில், ராணுவ பலத்தில், பொருளாதாரத்தில் பல மடங்கு ஆற்றல் வாய்ந்த ரஷ்யாவுக்கு எதிராக ஒரு வாரமாக உக்ரைன் தாக்குப்பிடிப்பதே அதிசயம்தான் என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். 'துணையோடு அன்றேல் நெடுவழி போகேல்' என்பது முதுமொழி. மிகப் பெரிய சாகசத்தைச் செய்ய நினைத்தாலும் அதற்கு உற்ற ஆலோசகர்களையும் வழிகாட்டிகளையும் வைத்துக்கொள்ளாமல் ஆட்சியாளர்கள் ஈடுபட மாட்டார்கள். புதினுக்கும் அப்படிப்பட்ட ஆலோசகர்கள் ரஷ்யாவிலேயே இருக்கின்றனர்.

உள்வட்ட நண்பர்கள்

ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கெய் ஷோய்கு குழுவில் முக்கியமானவர். நீண்ட கால நண்பர். புதின் சைபீரியாவுக்கு ஓய்வெடுக்கச் செல்லும்போதெல்லாம் உடன் சென்று அவருடன் வேட்டையிலும் மீன் பிடித்தலிலும் ஈடுபடுவார். புதின் சொல்வதை அப்படியே எதிரொலிப்பார். புதினுக்குப் பிறகு அதிபர் பதவிக்கு வரக்கூடியவர் என்றும் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதினின் உள்வட்டத்தில் இருப்பவர் வலேரி ஜெராசிமோவ். ரஷ்யத் தரைப்படையின் தலைமைத் தளபதி. 1999-ல் செசன்யாவில் ரஷ்யப் படைகளுக்குத் தலைமை வகித்தது முதல் அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர். அவருக்கு உக்ரைன் இப்போது பெரிய சவாலாக இருக்கிறது. கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததில் இவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

நிகோலாய் பட்ருஷேவ் ரஷ்ய பாதுகாப்புப் பேரவையின் செயலாளராக இருக்கிறார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிப்பதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று நிச்சயமாக நம்புகிறார். 1970-கள் முதல் புதினுடன் சகாவாக தொடர்ந்து பணிபுரியும் மூவரில் ஒருவர். உள்நாட்டு உளவுப்படைத் தலைவர் அலெக்சாந்தர் போர்ட்னிகோவ், வெளிநாட்டு உளவுப்பிரிவுத் தலைவர் செர்கி நரீஷ்கின் மற்ற இருவர். கேஜிபியில் புதினுடன் வேலைபார்த்த பட்ருஷேவ் பிறகு ஏற்படுத்தப்பட்ட எஃப்எஸ்பி என்ற உளவு அமைப்பின் தலைவராக 1999 முதல் 2008 வரை பதவி வகித்தவர். சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பிறகும் ரஷ்யா வலிமையோடு இருப்பதைப் பிடிக்காத மேற்கத்திய நாடுகள் அதையும் பிளவுபடுத்த சதி திட்டம் தீட்டியுள்ளன என்பது அவருடைய ஒற்றை வரி பல்லவி.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லவரோவ்

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லவரோவ் (71) தொடர்ந்து 18 ஆண்டுகளாக அத்துறையிலேயே பணியாற்றுகிறார். புதின் மீது இவருக்கு அதிக செல்வாக்கு இல்லையென்றாலும் இவருடைய நீண்டகால அனுபவத்தையும் தோழமையையும் புதின் இழக்க விரும்பவில்லை. உக்ரைன் மீது படையெடுக்க வேண்டும், சமரசப் பேச்சுக்கு மேலும் வாய்ப்பு தருவோம் என்றுதான் லவரோவ் கூறினார். புதின் கேட்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவையில் அவர் உரையாற்றியபோது 140-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். லவரோவ் அதனால் சிறிதும் கலங்கவில்லை.

ரஷ்ய கூட்டரசின் பேரவைத் தலைவர் வலன்டினா மட்வியென்கோ மட்டுமே புதினின் உள் வட்டத்தில் பெண். மிகுந்த செல்வாக்குள்ளவர் அல்ல, ஆனால் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்பத் திறமையாகப் பேசிவிடுவார்.

தேசியக் காவல் படையில் இப்போது 4 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்கள் புதினை மட்டுமே காப்பதற்காக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட விசுவாசப் படையினர். இதன் தலைவராக விக்டர் சொலடோவ் திகழ்கிறார். இவரிடமும் புதின் ஆலோசனை கலக்கிறார். ஓரிரு நாள்களுக்குள் உக்ரைனைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற உத்தி நிறைவேறாததால் ராணுவத்தைவிட இந்த காவல் படையைக் களத்தில் இறக்கியிருக்கிறார் புதின். சொலடோவ் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் அல்ல. அவருடைய படை வீரர்கள் துப்பாக்கிகளை மட்டும் கையாள்பவர்கள். இப் படையில் டாங்குகள் இல்லை. வினோதமான இந்தப் படையிடம் இப்போது பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுடன் அதிபர் புதின்

ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின், மாஸ்கோ மேயர் செர்கி சோபியானின், ரஷ்ய அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் ரோஸ்நெஃப்ட் தலைவர் இகோர் செச்சின் ஆகியோரும் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்கள். சரிந்துவரும் ரஷ்யப் பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறோம் என்ற கவலை பிரதமருக்கு வளர்ந்து கொண்டே வருகிறது. இவர்களைத் தவிர கோடீஸ்வரர்களான சில தொழிலதிபர்களையும் புதின் ஆலோசனை கலக்கிறார். ஆம், நிலைமை ரஷ்யாவுக்கு அத்தனை சிலாக்கியமாக இல்லை!

x