அணு உலையில் தீ: அடுத்த ஆபத்தில் உக்ரைன்


ரஷ்யப் படையினரின் தாக்குதலால் ஸாப்போரிஸியா அணு உலை தீப்பற்றி எரிவதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையான ஸாப்போரிஸியா அணு உலை உலையில் பணிபுரியும் ஊழியர்களும், அருகில் உள்ள எனெர்ஹோடார் நகர மேயர் த்மைத்ரோ ஆர்லோவ் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு டெலிகிராம் செயலி மூலம் இது குறித்து தகவல் தெரிவித்த த்மைத்ரோ ஆர்லோவ், “ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையான ஸாப்போரிஸியா உலையின் கட்டிடங்கள் மீதும், உலைகள் மீதும் எதிரிகள் (ரஷ்யர்கள்) தொடர்ந்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலின் விளைவாக, அதில் தீப்பற்றியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இது உலகின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பதிவுசெய்து வெளியிட்ட காணொலிக் காட்சி தற்போது உக்ரைன் ஊடகங்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அணு உலை மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யப் படைகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உக்ரைனியர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக அணு உலையை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க உக்ரைன் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வெடிகுண்டு சத்தமும், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தமும் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலையை நோக்கிச் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைப்பதில் உக்ரைன் பொதுமக்களும் ஈடுபட்ட காணொலிகள் வெளியாகியிருக்கின்றன.

அணு உலையின் எந்தப் பகுதியில் தீப்பற்றியிருக்கிறது என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

x