இந்தியர்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக இருக்கிறார்கள்: புதின் தகவல்


உக்ரனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை மறுத்திருந்த நிலையில், அந்நகரிலிருந்து வெளியேற விடாமல் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை உக்ரைன் படைகள் தடுத்துவருகின்றன என்றும், அவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கின்றன என்றும் ரஷ்ய அதிபர் புதின் நேற்று மாலை கூறியிருக்கிறார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று மாலை உரையாற்றிய அவர், “உக்ரைனில் படிக்கச் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை உக்ரைனியர்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கின்றனர். 3,179 இந்தியர்கள் கார்கிவ் நகரில் ஒரு ரயில்வே நிலையத்தில் ஒரு நாளுக்கும் அதிகமாகப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். சுமி நகரில் 576 பேர் பிணைக்கைதிகளாக இருக்கிறார்கள். கார்கிவ் நகரிலிருந்து வெளியேற விரும்பிய சீனர்கள் மீது ‘நியோ நாஜிகள்’ (புதிய நாஜிகள்) துப்பாக்கியால் சுட்டனர். அதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

வடகிழக்கு நகரங்களில் அதிகரித்த தாக்குதல்

இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றுவருகின்றனர். கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்திவருவதால், அவர்கள் அந்நகரிலிருந்து வெளியேறுவது கடும் சவாலாக மாறியிருக்கிறது.

புதன்கிழமை சற்றே நிறுத்திவைக்கப்பட்டிருந்த யுத்தம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கிவிட்டதால், கார்கிவ் நகரிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் இடையூறு ஏற்பட்டிருப்பதாக இந்தியா கூறியிருந்தது.

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில்தான் ரஷ்யா மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருகிறது. கார்கிவ், சுமி போன்றவை அந்தப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்கள் ஆகும்.

கார்கிவ் நகரிலிருந்து வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது. “இதையடுத்து ஏராளமான இந்திய மாணவர்கள் கார்கிவ் நகரிலிருந்து வெளியேறி அருகில் உள்ள பிஸோச்சின் நகரில் இருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,000. கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டு, அவர்களை மேற்கு அல்லது தெற்கு உக்ரைனுக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருந்தார்.

சுமி நகரில் இருக்கும் இந்திய மாணவர்கள், உக்ரைன் கல்வித் துறை ஒப்பந்ததாரர்களின் உதவியுடன், ரஷ்யாவின் குர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள பகுதிகள் வழியே வெளியேறும் முயற்சியில் இருக்கிறார்கள். உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளின் வழியே இதுவரை 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை

இதற்கிடையே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று பெலாரஸ் எல்லையில் நடந்து முடிந்தது. அதன்படி மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இந்த ஏற்பாட்டால், போரில் சிக்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் சென்று சேரவும் வழிவகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x