உக்ரைன் போர்: நடந்தே நாடு கடந்த நடிகர்!


ஷான் பென் ட்விட்டரில் வெளியிட்ட படம்

ஹாலிவுட் நடிகர் ஷான் பென் நம்மூர் திரை ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். 'ஐயாம் சாம்’, ‘டெட் மேன் வாக்கிங்’, ‘மில்க்’, ‘மிஸ்டிக் ரிவர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சிறந்த இயக்குநராகவும் அறியப்படும் ஷான் பென், ’இன் டு தி வைல்டு’ திரைப்படத்தின் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். செப்டம்பர் 11 தாக்குல் குறித்து வெளியான ஆவணப் படத் தொகுப்பில் அவர் இயக்கத்தில் உருவான ஆவணப் படமும் இடம்பெற்றிருக்கிறது. மெக்ஸிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் சாக்குவின் எல் சாப்போ கஸ்மானைப் பேட்டியெடுத்ததன் மூலம் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஷான்.

நடிகர் - இயக்குநர் ஷான் பென்

உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழல் உருவான காலகட்டத்திலேயே, நவம்பர் மாதத்தில் உக்ரைனுக்குச் சென்றிருந்த ஷான், அமெரிக்க - கனடா கூட்டு நிறுவனமான வைஸ் ஸ்டுடியோ சார்பில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக, உக்ரைன் அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் பேட்டியும் எடுத்திருந்தார். போர் தொடங்கிய பிப்ரவரி 24-ம் தேதி அன்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ஷான் பென்னும் பங்கேற்றிருந்தார்.

அந்நாட்டில் ரஷ்யத் தாக்குதல் உச்சமடைந்துவரும் நிலையில், லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகள் வழியே சாலைமார்க்கமாகத் தப்பிச் செல்கின்றனர். பலர் குழந்தைகள், உடைமைகளைச் சுமந்து மைல் கணக்கில் நடந்தே செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது.

அவர்களில் ஒருவராக ஷானும், நடந்தே போலந்து எல்லையைக் கடந்திருக்கிறார். சக்கரம் பொருத்தப்பட்ட சூட்கேஸை இழுத்துச் செல்லும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அவர், சக கலைஞர்கள் இருவருடன் போலந்து எல்லையை நோக்கி காரில் வந்ததாகவும், பின்னர் காரை நிறுத்திவிட்டு பல மைல்கள் நடந்தே சென்றதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர் பிழைப்பதற்காக பெரும்பாலும் உடைமைகளே இல்லாமல் பலர் எல்லையை நோக்கி கார்களில் செல்வதாகவும் வருத்தத்துடன் பதிவுசெய்திருக்கிறார். பெரும்பாலான கார்களில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருப்பதாகவும், அவர்கள் சொத்தாகக் கொண்டு செல்வது அவர்களது கார்களை மட்டும்தான் என்றும் பதிவுசெய்திருக்கிறார்.

அதேசமயம், காரிலிருந்து இறங்கி நடந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. அவர் வெளியேறும் சூழல் ஏற்பட்டது குறித்தும் அவர தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

x