உக்ரைன் - ரஷ்யா முதல் சுற்றில் பேசப்பட்டது என்ன?


உக்ரைன், ரஷ்யா இடையில் பெலாரஸ் தலைநகரில் திங்கள்கிழமை (பிப்.28) நடந்த முதல் சுற்று சமரசப் பேச்சுவார்த்தையில் பரிமாறப்பட்ட கருத்துகள் முழுதாக வெளியாகவில்லை. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும், ரஷ்யப் படைகளை குவிப்பதைக் கைவிட வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்தது. பதிலுக்கு ரஷ்யாவும் தங்களுடைய தரப்பு நிபந்தனைகளையும் சில கோரிக்கைகளையும் முன் வைத்தது. இரு நாட்டு குழுக்களும் அவரவர் தலைநகருக்குத் திரும்பி தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் சந்திக்க வருவதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டன. உக்ரைன் குழுவுக்கு ராணுவ அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் தலைமை தாங்கினார். இறுக்கமான சூழ்நிலையில்தான் பேச்சுவார்த்தை நடந்தது.

தாக்குதலை நிறுத்த வேண்டும், ரஷ்யப் படைகள் தங்களுடைய எல்லைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கையாக இருந்தது என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் ஆலோசகர் பொடலியாக் தெரிவித்தார். இரு தரப்பினரும் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றிய பட்டியலைத் தயாரித்தோம், அவற்றில் சிலவற்றுக்குத் தீர்வுகளையும் கூட குறிப்பிட்டுக்கொண்டோம் என்கிறார் பொடாலியாக். இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின், உதவியாளர் விளாதிமிர் மெடின்ஸ்கியும் ஆமோதித்தார். அதாவது சில அம்சங்களில் கருத்தொற்றுமைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதும் புரிகிறது.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

பெலாரஸில் நடந்த பேச்சு ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. பெலாரஸ் என்பது ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாட்டு எல்லைகளுக்கும் அருகில் உள்ள சிறிய நாடாகும். இவை மூன்றும் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்றவைதான்.

அடுத்த சுற்று பேச்சு பெலாரஸ், போலந்து எல்லையில் நடைபெறும் என்று மெடின்ஸ்கி பிறகு தெரிவித்தார்.

“இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, ஆனால் சமரசத்துக்கு சிறியதொரு வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், வீணாக்கக் கூடாது என்ற அடிப்படையில் பேச்சுக்கு உடன்பட்டோம்” என்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்துகொள்ள விரும்புகிறோம் என்று பிரஸ்ஸல்ஸில் உள்ள தலைமையகத்துக்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பினார் ஸெலன்ஸ்கி. இதுவும் புதிய கோரிக்கை அல்ல. ஏற்கெனவே உக்ரைன் மக்கள் பெரும்பாலானவர்களின் விருப்பம்தான் அது.

“உக்ரைன் தலைநகர் கீவுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதால் நம்மிடம் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தயார் நிலையில் வையுங்கள், நேட்டோ அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால் அதைத் தடுக்கவும் தற்காத்துக் கொள்ளவும் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதினும் கட்டளை பிறப்பித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைனில் உள்ள ராணுவத்தைச் செயலிழக்கச் செய்வதும் அந்த நாட்டில் உள்ள நாஜிகளை அகற்றுவதும்தான் ரஷ்ய ராணுவத்தின் நோக்கம் என்று புதின் அறிவித்திருக்கிறார். அத்துடன் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் என்கிற உக்ரைன் தன்னாட்சிப் பகுதிகளில் அவர்களைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்கிறார்.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ராணுவ ரீதியாக எந்த நடவடிக்கையையும் இதுவரை நேரடியாக எடுக்கவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நேட்டோ படைகளை எச்சரிக்கையாக இருக்கும்படி கட்டளையிட்ட அமெரிக்கா, போர்க் கப்பல்களையும் விமானங்களையும் அந்தப் பகுதிக்கு விரைந்து அனுப்பி வைத்திருக்கிறது. உக்ரைனுக்கு நேட்டோ படைகள் செல்லாது. ஆனால் ஆயுதங்களைத் தருவதுடன் ராணுவ ஆலோசகர்களையும் காயமடைபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போர்க்கள மருத்துவமனைகளையும் வழங்கும் என்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் எடுத்துள்ள பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் ரஷ்ய ரூபிளின் மதிப்பை சரித்துவிட்டன. அத்துடன் ரஷ்ய நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. ஐரோப்பிய வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதித்துவிட்டதால் ஏராளமான நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ரஷ்யர்கள் ஆங்காங்கே திரும்ப வழியின்றி தவிக்கின்றனர். ரஷ்யாவில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், விலைவாசி உயரும், வாழ்க்கைத் தரம் மோசமாகும் என்று ரஷ்யர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் உக்ரைனுக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் பிரச்சினை தீரும் என்பதே நிதர்சனம்!

x