போருக்கு எதிராகக் குரல் எழுப்பும் ரஷ்யத் தொழிலதிபர்கள்: புதினுக்குப் புதிய நெருக்கடி?


ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

உக்ரைன் மீதான போருக்கு எதிராக சர்வதே அளவில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் கண்டனங்களைச் சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்குப் புதிதாக இன்னொரு சவாலும் எழுந்திருக்கிறது. பெரும் தொழிலதிபர்களை நண்பர்களாகக் கொண்ட புதின், தற்போது அவர்களின் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். ரஷ்யாவின் மிக முக்கியத் தொழிலதிபர்களான மிகயீல் ஃப்ரைட்மேன், ஓலெக் தெரிபஸ்கா இருவரும் இந்தப் போரைக் கண்டித்திருக்கின்றனர்.

ரஷ்யாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஆஃல்பா வங்கியின் நிறுவனரும், லெட்டர்ஒன் எனும் தனியார் பங்கு நிறுவனத்தை நிர்வகிப்பவருமான மிகயீல் ஃப்ரைட்மேன் 2021-ல் உலகின் பெரும் பணக்காரர்கள் என ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 128-வது இடம் பிடித்தவர். உக்ரைனைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் இன்னமும் உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில்தான் வசித்துவருகின்றனர்.

இவர் தனது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், “போர் என்பது எதற்குமே ஒரு பதிலாக இருக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருப்பதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“ரஷ்யாவில் தொழில்களை நடத்தி, ஒரு ரஷ்யக் குடிமகனாகத்தான் எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் கழித்திருக்கிறேன். உக்ரைனியர்களுடனும், ரஷ்ய மக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் நான், தற்போதைய மோதலை இரு தரப்புக்குமான துயராகத்தான் பார்க்கிறேன்” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார் ஃப்ரைட்மேன்.

பொதுவாக அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதையும் பேசாத ஃப்ரைட்மேன் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருப்பது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

டெலிகிராம் செயலியில் தனது கருத்தைப் பதிவுசெய்திருக்கும் தெரிபஸ்கா, “அமைதி மிக முக்கியமானது” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினியத் தயாரிப்பு நிறுவனமான ரூஸல் நிறுவனத்தின் உரிமையாளரான ஓலெக் தெரிபஸ்கா, ரஷ்ய அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர். அதன் காரணமாகவே 2018 முதல் அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்துவருபவர்.

ரஷ்யாவின் பொதுமக்களில் பலர், சமூகச் செயற்பாட்டாளர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் என ஏராளமானோர் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எனினும், பெரும் தொழிலதிபர்கள், பில்லியனர்கள் இவ்விஷயத்தில் அடக்கிவாசிக்கின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் போருக்கு எதிராக இரண்டு பெரும் தொழிலதிபர்கள் பேசியிருப்பது, ரஷ்ய உயர்குடி மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் ரஷ்யத் தொழிலதிபர்களையும் குறிவைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

x