‘சுற்றிலும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்பதால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறோம்..’ என்று உக்ரைனில் மருத்துவம் பயிலச் சென்ற மகள் ஜனனி அலைபேசியில் தெரிவித்ததை அடுத்து, மாணவியின் தாயார் பர்வதம் கலங்கிப் போயுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சி அருகே உள்ளது மாம்பாளையம் முல்லைமணிக்காடு கிராமம். இங்கு வசிக்கும் முத்துசாமி - பர்வதம் தம்பதியின் மூத்த மகள் ஜனனி. இவர் உக்ரைன் நாட்டின் ஒலிவிஸ்கா கார்கியூ நேஷனல் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் அங்கு தீவிரமான போர்ச் சூழல் நிலவி வருகிறது. முக்கிய நகரங்களை கைப்பற்ற முயலும் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும், பொதுமக்களும் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் குடியிருப்புகளை தாக்க மாட்டோம் என்று ரஷ்யா அறிவித்திருந்தபோதும், போரின் போக்கில் ஏராளமான குடியிருப்புகளை குண்டுகள் தாக்கி வருகின்றன.
இந்த நெருக்கடிச் சூழலின் மத்தியில், தாய் நாடு திரும்ப வழியில்லாது ஏராளமான இந்திய மாணவ மாணவியர் ஆங்காங்கே சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் திருச்செங்கோடு ஜனனியும் ஒருவர். மகள் ஜனனியை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து மாணவி ஜனனியின் தாயார் பர்வதம் கூறுகையில், ”சிறுவயது முதலே, எங்கள் மகள் ஜனனி மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் நுழைவுத் தேர்வாலும், மருத்துவக் கல்லூரிகள் கேட்ட அதிகமான நன்கொடையாலும் உள்நாட்டில் ஜனனியை மருத்துவ படிப்பில் சேர்க்க முடியவில்லை. இதனால் குறைந்த செலவில் மருத்துவ சீட்டு கிடைக்கும் உக்ரைனுக்கு மகளை படிக்க அனுப்பி வைத்தோம்.
ஜனனி தற்போது மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு வருகிறார். இதனிடையே உக்ரைனில் போர் மூண்டுள்ளதால் எனது மகளும், அவரைப் போன்ற பலரும் அங்கு பாதுகாப்பிலாது பதுங்கு தளங்களிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளனர். போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் தவித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினர், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளவர்களை இன்னும் தொடர்பு கொள்ளவே இல்லையாம். இதனால் எங்கள் மகள் இந்தியா திரும்புவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
நேற்று முன்தினம் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகள் ஜனனி, தானும் தன்னைப் போன்ற சுமார் 200 பேரும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி இருப்பதாக தெரிவித்தார். தற்போதைக்கு சுமாரான உணவு தண்ணீர் கிடைத்து வந்தாலும், எத்தனை நாளைக்கு அவை நீடிக்கும் என தெரிவில்லை என்றார். மேலும், அடிக்கடி குண்டுகள் வெடிக்கும் சத்தம் காரணமாக பயந்து போயிருப்பதாகவும் ஜனனி தெரிவித்தார். இதைக்கேட்டு எங்களால் அழ மட்டுமே முடிந்தது. மகள் மன தைரியம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிக்காட்டவில்லை.
இந்திய பிரதமர் அவர்களும், தமிழக முதல்வர் அவர்களும் விரைந்து எனது மகளையும், அவரைப்போல் உக்ரைனில் தவித்து வரும் இதர மாணவ மாணவியரையும் பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எல்லைப்புற அண்டை நாடுகளுக்கு செல்ல ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் கடந்து செல்ல வேண்டி இருப்பதால், மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் கவலை கொண்டுள்ளோம். எனவே இந்திய தூதரக அதிகாரிகள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.