ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் சீர்குலைந்து வரும் உக்ரைனிலிருந்து, இந்திய மாணவர்களை மீட்கும் தொடர் நடவடிக்கையின் அங்கமாக, 3-வது ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவத் தாக்குதல் உக்கிரமடைந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் மும்முரமாக உள்ளன. இரண்டொரு நாளில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் தீரத்துடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதனையடுத்து பல்லாயிரம் கோடி ராணுவ உதவியை அமெரிக்காவும்; ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் ஆயுத தளவாடங்களையும் உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளன.
உக்ரைனின் போர் நடவடிக்கை நீண்டு வருவதால் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவுமாறு கோரி வருகின்றனர். வான்பரப்பு மூடப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளதால், உக்ரைனின் எல்லையோர நாடுகள் வாயிலாக இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின. பெருவாரியான மருத்துவ மாணவர்களை அடங்கிய இந்தியர்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளின் எல்லைகளை அடைந்து, அங்கு காத்திருக்கும் இந்திய அதிகாரிகள் வாயிலாக சிறப்பு விமானத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த வகையில் இந்திய மாணவர்களுடன் முதலாவது விமானம் நேற்றும், இரண்டாவது விமானம் இன்று நள்ளிரவிலும் டெல்லி திரும்பியது. மூன்றாவது ஏர் இந்தியா விமானம் ஹங்கேரியிலிருந்து இன்று(பிப்.27) காலை டெல்லி வந்தடைந்தது. ஒவ்வொரு விமானத்திலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். டெல்லியில் அவர்கள் குறித்த விபரங்கள், உடல் பரிசோதனைகள் முடிந்த பிறகு, பேருந்து மற்றும் ரயில் வாயிலாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இன்னும் 15 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களில் பரிதவித்து வருகின்றனர். சில இடங்களில் உணவு மற்றும் தண்ணீருக்கு வழியின்றி சிரமப்படுவதாகவும் அங்குள்ள மாணவர்கள் வாயிலாக தெரிய வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் உக்ரைனில் உள்ள மருத்துவ மாணவர்களின் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.