பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் சரமாரி புகார்


பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளதோடு, ரஷ்யா மீது சரமாரியாக புகார் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய தரப்பில் 3,500 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் திடீரென உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

இதனை ஏற்றுக் கொண்டார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி. ஆனால், ரஷ்ய படைகளில் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனிடையே, உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று புதின் கூறியது உக்ரைன் அதிபரை கொந்தளிக்க வைத்தது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டு மறுபக்கம் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பேச்சுவார்த்தையில் இருந்து பின் வாங்கியது உக்ரைன்.

இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்துவிட்டது விட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தொடரும் என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் கூறியுள்ளார். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசியுள்ளார் உக்ரைன் அதிபர். அப்போது, ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைன் போர் நிலவரம் குறித்தும் எடுத்துரைத்துள்ளதாகவும் உக்ரைன் குடியிருப்புகளின் மீது ரஷ்யா துப்பாக்கிச்சூடு நடத்துவாகவும் பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

x